காற்று, மழைக் காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்கும் முறைகள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

திருநெல்வேலி மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று வீசுவதுடன், ஒரு சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. பலத்த காற்று காரணமாக சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டு, நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

பலத்த காற்று, மழைக் காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்க மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின்மாற்றிகள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின் கம்பிகளுக்கு அடியில் நிற்பதையும், வாகனங்களை மின் கம்பங்களுக்கு அடியில் நிறுத்துவதையும் தவிர்க்க வேண்டும். மின் கம்பிகள் அறுந்து விழுந்தால், அதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகளில் விழுந்தால் பொதுமக்கள் தாமாக அதனை அகற்ற முயற்சிக்க கூடாது. மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையது. மரக்கிளைகள் மின் கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபருக்கு மின்விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மின் மாற்றிகள், மின் பகிர்வு பெட்டிகள், மின் கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கியிருந்தால் அதன் அருகே செல்லக் கூடாது. அதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வீடுகள், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் ஏற்படும் மின் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்க கூடாது. மின் தடையை நிவர்த்தி செய்ய 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மழையின்போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால், அந்த பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த பகுதியில் மின்சாரம் உபயோகத்தை தவிர்க்க வேண்டும். மின் கம்பியில் போடப்பட்டுள்ள ஸ்டே கம்பிகளில் கால்நடைகளை கட்டுவது, பந்தல் தூணாக பயன்படுத்துவது, துணி காயப்போடுவதைத் தவிர்க்க வேண்டும். விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றம். அவ்வாறு மின் வேலி அமைத்தால் மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்படும். மின்சாரம் சம்பந்தப்பட்ட அனைத்து தேவைகளுக்கும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையத்தை 9498794987 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in