கவுரவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் அவசியம்: பிருந்தா காரத் வலியுறுத்தல்

கவுரவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் அவசியம்: பிருந்தா காரத் வலியுறுத்தல்
Updated on
1 min read

கவுரவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றக் கோரி தருமபுரி மாவட்ட அனைத்து பெண்கள் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று சிறப்பு மாநாடு நடந்தது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் அமிர்தம் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:

நம் நாட்டில் குற்றங்களை சட்டப்படி பதிவு செய்ய முடியாத மோசமான சூழல் நிலவி வருகிறது. கொலைக் குற்றங்கள் கூட சில நேரங்களில் அதற்குரிய சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படுவதில்லை. காதலித்து கலப்புத் திருமணம் செய்த பலரின் உயிர் சாதியின் பெயரால் பறிக்கப்பட்டுள்ளது.

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ஐ.நா சபையில் கவுரவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்பது பற்றிய பேச்சு எழுந்தது. அப்போது இந்தியா சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் இந்தியாவில் அதுபோன்ற சம்பவங்கள் எதுவுமே நடப்பதில்லை எனக் கூறினர். ஆனால், இங்கே உண்மை நிலை வேறாக உள்ளது.

சாதி, மதங்களின் பெயராலும், பிற்போக்குத் தனங்களாலும் காதல் குற்றம் என்று பார்க்கப்படுகிறது. சுய விருப்பத்துடன் தங்கள் இணையைத் தேர்வு செய்வது இங்கே சவாலாக உள்ளது. தருமபுரி இளவரசன்-திவ்யா இருவரும் கேரளா அல்லது மேற்கு வங்கத்தில் இருந்திருந்தால் அவர்களுக்கு இப்படியொரு நிலை வந்திருக்காது. சாதிய சக்திகளின் தூண்டுதல் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. இந்தச் சூழலை மாற்றவும், கவுரவக் கொலைகளை தடுக்கவும் சிறப்புச் சட்டம் கேட்டு போராடுவதே நம் பணி. இந்த கோரிக்கை நிறைவேற மக்கள் இதை ஒற்றுமையுடன் முன்னெடுத்து போராட வேண்டும். இவ்வாறு பிருந்தா காரத் பேசினார்.

நிகழ்ச்சியில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி, மாவட்டச் செயலாளர் கிரைஸா மேரி, அரூர் சட்டப் பேரவை உறுப்பினர் டில்லிபாபு, தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சங்கர், செந்தில்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in