Published : 12 Jul 2021 09:47 PM
Last Updated : 12 Jul 2021 09:47 PM

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் பிடிவாதமும் மத்திய அரசின் பாராமுகமும் நல்லதல்ல: அமைச்சர் துரைமுருகன்

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடக அரசின் போக்கை மத்திய அரசு பார்த்துக் கொண்டிருப்பது நல்லதல்ல என தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேகதாதுவில் அணையை கட்டுவதற்கு யாரையும் கேட்கத் தேவையில்லை என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

தமிழகத்திற்கு எந்தெந்த இடத்திலிருந்து எவ்வளவு நீரைத் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக ஆணையிட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிற நீரை இடைமறித்து மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று சொல்வது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே புறக்கணிப்பது போன்றது.

மேலும், மத்திய அரசின் தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலும் ஒரு மாநிலத்திற்குள் ஓடுகிற நீர் அந்த மாநிலத்திற்கே என்று சொந்தம் கொண்டாட முடியாது, அது தேசிய சொத்து என்று தீர்ப்புரைத்திருப்பதை கர்நாடக மாநில அமைச்சர் அறிந்திருப்பார் என்றே கருதுகிறேன்.

இவ்வளவையும் மீறி அணையைக் கட்டுவோம் என்று சொல்வது, நடுவண் மன்றத் தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் நாங்கள் மதிக்கமாட்டோம் என்று சொல்வதுபோல் தெரிகிறது.

இது ஒரு ஜனநாயக நாடு. இத்தகைய போக்கு ஒரு மாநிலத்திற்குள் வளர்வதை மத்திய அரசு பார்த்துக் கொண்டிருப்பதும் நல்லதல்ல.

அண்டை மாநிலத்தின் உறவிற்கும் இது உகந்ததல்ல. மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் சொல்வதைப் போல், எந்த நிலையிலும் சட்டப்படி அதைத் தடுத்தே தீருவோம் என்று சொல்வதற்கு எங்களுக்கு உரிமை உண்டு" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக இன்று பிற்பகல், மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை, எனவே அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு முழு உரிமையுள்ளது என கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.

அவருக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x