Published : 12 Jul 2021 09:27 PM
Last Updated : 12 Jul 2021 09:27 PM

நீட் அறிவிப்பை திரும்பப் பெறுக; இந்த ஆண்டு தேர்வை ரத்து செய்க: திருமாவளவன் வலியுறுத்தல்

நீட் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்த ஆண்டுக்கான நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடத்தப்படும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். நாளை மாலை முதல் இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா மூன்றாவது அலை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது என மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கும் நிலையில் மத்திய அரசு செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி நீட் தேர்வை ரத்துசெய்யவேண்டும்; இந்த அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

கரோனா மூன்றாவது அலை ஜூலை 4 ஆம் தேதி ஆரம்பித்து விட்டதாக ஐதராபத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் கூறியுள்ளார். கான்பூர் ஐஐடி இல் நடத்தப்பட்ட ஆய்வில் கரோனா மூன்றாவது அலை செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் உச்சத்தில் இருக்கும் எனவும் அப்போது நாளொன்றுக்கு 5 லட்சம் பேர்வரை நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவார்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் நீட் தேர்வை நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருப்பது மாணவர்களின் உயிரைப்பற்றி அது கவலைப்படாததையே காட்டுகிறது.

சில நாட்களுக்கு முன்புதான் மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் கரோனா மூன்றாவது அலையின்போது 8 மாநிலங்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் என எச்சரித்திருந்தார். கோவா, இமாச்சலப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களில் கரோனா மூன்றாவது அலையின் தாக்குதல் அதிகமாக இருக்கும் எனவும்; அந்த மாநிலங்களில் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் உட்பட பாதுகாப்பு எச்சரிக்கைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்திய அளவில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று 42766 ஆக உயர்ந்து இருந்தது. 1200 பேர் மரணமடைந்ததாகக் கூறப்பட்டது. டெல்டா ப்ளஸ் என்ற மிகவும் ஆபத்தான புதிய வகை வைரஸ் நாட்டின் பல மாநிலங்களிலும் இப்பொழுது வேகமாகப் பரவி வருகிறது. திரிபுராவிலிருந்து சோதனைக்கு அனுப்பப்பட்ட வைரஸ் சாம்பிள்களில் 90% டெல்டா ப்ளஸ் வைரஸ் என்று கண்டறியப்பட்டிருப்பது உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கொரோனாவிலிருந்து காப்பாற்றிக்கொள்ள தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்ற நிலையில், போதுமான எண்ணிக்கையில் மாநிலங்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படவில்லை. மாநில அரசுகள் எவ்வளவோ வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியும்கூட மத்திய அரசு வாக்குறுதி அளித்த வேகத்திலோ, எண்ணிக்கையிலோ தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்கவில்லை. இதனால் மூன்றாவது அலையிலிருந்து மக்களைப் பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கிறது.

இந்தச் சூழலில் நீட் தேர்வுக்கான தேதியை அறிவித்திருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. கொரோனாவைக் காரணம் காட்டி சிபிஎஸ்இ தேர்வுகளைத் தன்னிச்சையாக ரத்து செய்த மத்திய அரசு, இப்போது மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமல் நீட் தேர்வுத் தேதியை அறிவித்திருப்பது அதன் மேலாதிக்கப் போக்கையும், பொறுப்பற்ற தன்மையையுமே காட்டுகிறது. இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே, உடனடியாக இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற்று, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்துசெய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x