

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வியாழக்கிழமை தோறும் மூன்றாம் பாலின சிறப்பு மருத்துவப்பிரிவு செயல்பட தொடங்கியது. திருநங்கையாக, திருநம்பியாக மாற விரும்புகிறவர்கள், அதற்கான அறுவை சிகிச்சைகளை இலவசமாக இந்த சிகிச்சைப்பிரிவில் எடுத்துக் கொள்ளலாம் என்று டீன் ரத்தினவேலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் இன்று (ஜூலை 12) கூறியதாவது:
"மூன்றாம் பாலினத்தவர்களுக்கான (திருநங்கை மற்றும் திருநம்பி) பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவப்பிரிவு, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டுதல் படி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கான புற நோயாளிகள் பிரிவு அறை எண் 4-ல் செயல்படுகிறது. ஆண்டின் அனைத்து வியாழக்கிழமைகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்குகிறது.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து சிறப்புப் பிரிவுகளும் ஒரே இடத்தில் செயல்படுகிறது. இந்த பன்னோக்கு மருத்துவ சிகிச்சை பிரிவில் உளவியல் ஆலோசனை, ஹார்மோன்கள் சிகிச்சை, பாலின மாற்றுதல் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். திருநங்கையாக மாற விரும்புபவர்களுக்கு ஆண் குறி மற்றும் விதை நீக்கம், செயற்கை மார்பகம் பொருத்துதல், திருநம்பியாக மாற விரும்புபவர்களுக்கு கர்ப்பப்பை நீக்கம், மார்பகங்கள் நீக்குதல் போன்ற அறுவை சிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும்.
பாலின மாற்று அறுவை சிகிச்சை நிரந்தரமானது மற்றும் மாற்றத்தக்கது அல்ல. மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதல் படி 18 வயது நிரம்பிய பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்புபவர்கள், உளவியல் மருத்துவ ஆலோசனையை குறைந்தது மூன்று மாதங்களும், ஹார்மோன் மருத்துவ சிகிச்சையை ஆறு மாதங்களும் எடுத்துக் கொண்டு வெளித் தோற்றத்தில் மற்றும் உடையில் திருநங்கை மற்றும் நம்பியாக ஒரு ஆண்டும் கண்டிப்பாக மருத்துவரின் கண்காணிப்பில் வாழ வேண்டும்.
மூன்றாம் பாலினம் அடையாள அட்டை பெறுவதற்கான மருத்துவ பரிசோதனைகளும், ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறுகிறது. மருத்துவப்பரிசோதனைகளுக்குப் பிறகு சமூக நலத்துறையை அணுகி அவர்கள் நிரந்தர அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.