Published : 12 Jul 2021 04:47 PM
Last Updated : 12 Jul 2021 04:47 PM

சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கும் மாதம் ரூ.3000 உதவித்தொகை: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை, சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கும் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டப் படிப்பு முடித்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், அரசு சட்டக் கல்லூரிகளுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும் எனவும், ஸ்கூல் ஆஃப் எக்சலன்ஸ் இன் லா எனும், சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, வழக்கறிஞர் கற்பகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், இது சம்பந்தமான அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும், சீர்மிகு சட்டப் பள்ளியில் சட்டம் படித்தவர்களுக்கும் உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ''அரசு சட்டக் கல்லூரி என்பது அரசால், அரசு நிதியுதவியால் நடத்தப்படுவது. அந்த வகையில் சீர்மிகு சட்டப் பள்ளியும் அரசால் நிர்வகிக்கப்படுகிறது.

அதனால், அதுவும் அரசு சட்டக் கல்லூரிதான். அந்தக் கல்லூரியில் படித்து வழக்கறிஞர்களாகப் பதிவு செய்கிறவர்கள், பிற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்பட்சத்தில் உதவித்தொகையை வழங்க வேண்டும்'' என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x