

விழிப்புணர்வு ஏற்படுத்த தெலங்கானாவில் மலைவாழ் பழங்குடியின மக்களுடன் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை ஆளுநர் தமிழிசை இன்று செலுத்திக்கொண்டார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பை கவனித்து வருகிறார். அவர் கடந்த ஏப்ரல் 2ம் தேதி புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்.
தற்போது தெலங்கானா சென்றுள்ள ஆளுநர் தமிழிசை மலைவாழ் மக்களுடன் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
இதுபற்றி அவர் கூறுகையில், " தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், மகேஸ்வரம் மண்டல் கே.சி.மண்டா என்ற கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு கரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த கிராமத்தை நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாற்றவும், அங்கு வாழும் மக்களுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்"என்று தெரிவித்துள்ளார்.