

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து, இன்று திருச்சியில் காலி சமையல் கேஸ் சிலிண்டருடன் சைக்கிள் பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
கட்சியின் மாவட்ட அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் இருந்து கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் வி.ஜவகர் தலைமையில் இன்று (ஜூலை 12) சைக்கிள் பேரணி தொடங்கியது.
மாவட்டப் பொருளாளர் ராஜா நசீர், மாநிலப் பொதுச் செயலாளர்கள் எம்.சரவணன், ஜி.கே.முரளி, வழக்கறிஞர் இளங்கோவன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் எல்.ரெக்ஸ் உட்பட ஏராளமானோர் சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டனர்.
பேரணியில் காலி சமையல் கேஸ் சிலிண்டருக்கு மாலையிட்டு சைக்கிளில் காங்கிரஸார் எடுத்துச் சென்றனர். சைக்கிள் பேரணியைத் தெப்பக்குளம் அஞ்சல் நிலையம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை கடுமையாக உயர்த்தப்பட்டதற்கு மத்திய அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையைக் குறைக்கவும், கட்டுப்படுத்த வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, சைக்கிள் பேரணி சென்ற, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 34 பேரை போலீஸார் கைது செய்தனர்.