Published : 12 Jul 2021 01:21 PM
Last Updated : 12 Jul 2021 01:21 PM

கர்நாடக அரசுக்குக் கண்டனம்; தமிழக அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

கர்நாடக அரசு கட்டும் மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கூட்டினார். இதில் கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சிக்குக் கண்டனம், தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிப்பது என்பன உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வர், பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்துத் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சமீபத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரினார்.

மேகதாது அணை அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனக் கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியபோது, இந்த அணை கட்டுவதால், தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இது எதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி, இந்த அணை அமைந்திட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபடத் தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடக முதல்வருக்கு பதில் கடிதம் எழுதினார்.

இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்திலுள்ள சட்டமன்ற அனைத்துக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் தலைமையில், இன்று காலை 10.30 மணியளவில், தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, கான்ஸ்டண்டைன், காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, பாமக சார்பில் ஜி.கேமணி, மதிமுக சார்பில் சின்னப்பா, விசிக சார்பில் திருமாவளவன், ரவிகுமார், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, இடதுசாரி கட்சிகள் சார்பில் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் பேச அனுமதிக்கப்பட்டனர். பின்னர் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேகதாது பிரச்சனை குறித்து நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மூன்று முக்கிய தீர்மானங்கள்:

மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசுக்குக் கண்டனம்

‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி, தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளைக் கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்துவருவது மிகவும் கண்டனத்திற்குரியது.

இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்குத் தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய மத்திய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதியையும் வழங்கக் கூடாது என மத்திய அரசைக் கேட்டுக்கொள்வது.

தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு

இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

கூட்டத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் சென்று மத்திய அரசிடம் அளிப்பது

தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை மத்திய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது, அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x