Published : 12 Jul 2021 12:48 PM
Last Updated : 12 Jul 2021 12:48 PM

மன்னார்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம்: அனைத்துக் கட்சிகள் தீர்மானம்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியைத் தலைநகரமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். இதற்காக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மீண்டும் மறுவரையறை செய்ய வேண்டும் என மன்னார்குடியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சேவை சங்கங்கள் இணைந்து தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.

மன்னார்குடி நகரம் 155 ஆண்டு கால நகராட்சியைக் கொண்ட பழமையான நகரம். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தமிழகத்திலேயே அதிக அளவு சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்கேற்ற நகரம். தேசியம், திராவிடம், பொதுவுடமை எனக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற அரசியல் தலைவர்கள் இந்தப் பகுதியில் உருவாகி தமிழக அரசியலுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்திருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் மன்னார்குடி நகரத்தை மாவட்டத் தலைநகரமாக தரம் உயர்த்த வேண்டுமெனக் கடந்த 25 ஆண்டுகளாக மன்னார்குடி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசின் கவனத்துக்குக் கோரிக்கையைக் கொண்டுசெல்லும் வகையில், மன்னார்குடியில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சேவை சங்கங்கள் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தின.

கூட்டத்துக்கு மன்னார்குடி அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாகச் செயல்படும் நேசக்கரம் அமைப்பின் தலைவர் காவிரி எஸ்.ரங்கநாதன் தலைமை வகித்தார்.

முன்னாள் நகர மன்றத் தலைவர்கள் சிவா.ராஜமாணிக்கம், வி.எஸ். ராஜேந்திரன், சுதா அன்புச்செல்வன், திமுக சார்பில் முன்னாள் நகரச் செயலாளர் ராஜ.பூபாலன், தலைமைக் கழகப் பேச்சாளர் மன்னை சோம. இளங்கோவன், அவைத்தலைவர் முருகையன், அதிமுக சார்பில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வாசுகிராமன், ஒன்றியச் செயலாளர் தமிழ்செல்வன், காங்கிரஸ் கட்சி மன்னை மதியழகன், மதிமுக மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன், நகரச் செயலாளர் சண்.சரவணன், பாஜக செந்தில் ராஜ்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் ரகுபதி, திராவிடர் கழகம் கைலை. ஊமைத்துரை, இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் அப்துல் கரீம், வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.வி.ஆனந்த், பொதுச் செயலாளர் ஏ.பி.அசோக், லயன்ஸ் சங்கம் சார்பில் குமட்டித் திடல் கோவிந்தராஜ், ரோட்டரி சங்கம் டாக்டர் பாலகிருஷ்ணன், நீடாமங்கலம் பகுதி லயன்ஸ் சங்க பிரமுகர் நீலன் அசோகன், ஜேசிஐ அமைப்புகள் சார்பில் வி.எஸ்.கோவிந்தராஜன், எல்.ஐ.சி ஊழியர் சங்க கோட்டப் பொறுப்பாளர் வ.சேதுராமன், தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் இளையராஜா, அப்டெக் ரமேஷ் உட்படப் பல்வேறு சேவை சங்க நிர்வாகிகளும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ’’ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை என மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் மக்களை விரைவாகச் சென்றடைய, 10 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்கின்ற அடிப்படையில், குறைந்தபட்சம் இதனை 6 மாவட்டங்களாகத் தற்போது உருவாக்க முடியும். அதன்படி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மறுவரையறை செய்ய வேண்டும். 150 ஆண்டுகள் பழமைமிக்க கட்டமைப்புகளைக் கொண்ட மன்னார்குடியைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.

அந்த மாவட்டத்தில் மன்னார்குடி நீடாமங்கலம் திருத்துறைப்பூண்டி கூத்தாநல்லூர் வருவாய் வட்டங்கள், அதுபோல் நிலுவையில் உள்ள முத்துப்பேட்டை வருவாய் வட்டத்தையும் இணைப்பதோடு, பட்டுக்கோட்டை வருவாய் வட்டத்திலுள்ள மதுக்கூர் நகரத்தையும், வட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள வடசேரி நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய வருவாய் வட்டங்களை உருவாக்கி, மேற்கண்ட வட்டங்களை இணைத்து, மன்னார்குடியைத் தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாகத் தமிழக அரசை பல்வேறு வகையிலும் வலியுறுத்துவது’’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தத் தீர்மானம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. முன்னதாக மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜாவிடம் கோரிக்கை தொடர்பாக அனைத்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x