

முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்கிற கோரிக்கையைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அரசுக்கு வைத்துள்ளது.
இந்தியாவில் மிகப்பெரும் இயக்கமாக காங்கிரஸ் இயக்கம் இயங்கியது. காங்கிரஸுக்குள் இளம் தலைவர்களான நம்பூதிரிபாட், ஜோதிபாசு, சுந்தரய்யா, ரணதிவே, ஜோஷி, ஏ.கே.கோபாலன் உள்ளிட்ட பல தலைவர்கள் சோஷலிஸ்ட் காங்கிரஸ் எனத் தனி அமைப்பாகச் செயல்பட்டனர். இதில் தமிழகத்தில் சங்கரய்யா, ஜீவா, பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்களும், திராவிடர் கழகத்தை உருவாக்கிய பெரியார் போன்றோரும் காங்கிரஸ் இயக்கத்திற்குள் இருந்து செயல்பட்டனர்.
பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவானது. பெரியார் நீதிக்கட்சியில் இணைந்தார். பின்னர் திராவிடர் கழகம் உருவானது. ஜீவா, சங்கரய்யா, பி.ராமமூர்த்தி போன்றோர் பொதுவுடமை இயக்கத்தில் இணைந்தனர். தமிழக அரசியல் வரலாற்றில் மூன்று பெரும் இயக்கங்களாக பொதுவுடமை இயக்கமும், திராவிட இயக்கமும், காங்கிரஸ் இயக்கமும் இயங்கின. சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையருக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அவர் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். சுதந்திரம் கிடைத்த பின்னரும் அவர் விடுதலை செய்யப்படவில்லை. பின்னர் பெரும் போராட்டத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நல்லகண்ணு போன்றோருடன் இணைந்தும், பின்னர் 1964ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் செயல்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பை வகித்துள்ளார். இன்று 100 வயதைக் கடந்து சங்கரய்யாவும், நூறு வயதை நோக்கி நல்லகண்ணுவும் சுதந்திரப் போராட்டத்தின் சாட்சியாக தமிழகத்தில் விளங்குகின்றனர்.
வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருக்கும் சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள் வரும் ஜூலை 15 அன்று கொண்டாடப்படவுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டு முழுவதும் இதை விழாவாகக் கொண்டாட முடிவு செய்துள்ள நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவின் நூறாவது பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு இன்று வெளியிட்ட அறிக்கை:
“இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துத் தனது மாணவப் பருவம் தொடங்கிப் போராடியவர் என். சங்கரய்யா. விடுதலைக்குப் பிறகும், உழைக்கும் மக்களின் உரிமைக்காக, சமத்துவச் சமூகத்தைக் கட்டமைத்திடத் தொடர்ந்து போராடியவர். சிறை வாழ்க்கை, தலைமறைவு வாழ்க்கை எனப் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு மக்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
பாடப் புத்தகத்தில் மட்டுமே விடுதலைப் போராட்ட வீரர்களைக் குறித்துப் படிக்கும் வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு, நாட்டின் விடுதலைக்காகப் போராடியப் பெருமகனார், நூறாண்டு காலம் நம்மோடு வாழ்கிறார் என்பது அரிதான, மகிழ்வான அனுபவமாகும். வாழும் வரலாறாகத் திகழும் என்.சங்கரய்யா பிறந்த நூற்றாண்டைக் கோவில்பட்டியில் அவர் பயின்ற பள்ளியும், மதுரையில் அவர் பயின்ற அமெரிக்கன் கல்லூரியும் உரிய முறையில் கொண்டாட வேண்டும்.
வாழும் விடுதலைப் போராட்ட வீரர் நூற்றாண்டைக் கொண்டாடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை. அத்தகைய வாய்ப்பு, தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பைத் தக்க முறையில் பயன்படுத்தி, பெரும் மகிழ்ச்சியுடன், மக்களோடு இணைந்து அரசும் கொண்டாட வேண்டும்.
எளிமையின் சின்னமாக, நேர்மையின் எடுத்துக்காட்டாக, உழைப்பின் உருவமாக நம்மோடு வாழும் தோழர் என்.சங்கரய்யாவின் நூற்றாண்டை அரசு விழாவாகத் தமிழக அரசு கொண்டாட வேண்டும்''.
இவ்வாறு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை விடுத்துள்ளது.