Published : 12 Jul 2021 03:12 AM
Last Updated : 12 Jul 2021 03:12 AM

மேகேதாட்டு அணை விவகாரம்; முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்: சென்னையில் இன்று நடக்கிறது

சென்னை

மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து சட்டப்பேரவை கட்சிகளின் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கிறது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் மேகேதாட்டு என்ற இடத்தில், காவிரி ஆற்றின்குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி எடுத்து வருகிறது.இத்திட்டத்தை செயல்படுத்தினால், தமிழகத்துக்கு கர்நாடக அரசு வழங்க வேண்டிய நீரின் அளவு குறைந்துவிடும் என்பதால், அணையை கட்டக் கூடாது என்று தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், அணைகட்டுவதை தடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்துஎடியூரப்பாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தமிழகவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் மேகேதாட்டு அணை திட்டத்தை தொடரக் கூடாது என்று கூறியிருந்தார்.

அதன்பின், மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகேதாட்டு அணை மற்றும் மார்க்கண்டேய நதியில் கர்நாடகம் கட்டியுள்ள புதிய அணை விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். ஆனால், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவோ, மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான சாதகமான அம்சங்கள் கர்நாடகாவுக்கு இருப்பதால், அணையை கட்டியே தீருவோம் என்று அறிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 10.30 மணிக்கு கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க சட்டப்பேரவையில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x