Published : 12 Jul 2021 03:12 AM
Last Updated : 12 Jul 2021 03:12 AM

வானில் இன்றும், நாளையும் சந்திரன், செவ்வாய், வெள்ளி நெருங்கி தோன்றும் அரிய நிகழ்வு: வெறும் கண்களால் பார்க்கலாம்

சென்னை

வானில் சந்திரன், செவ்வாய், வெள்ளி ஆகியவை நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வுஇன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதை வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வான் இயற்பியல் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

சந்திரன், செவ்வாய், வெள்ளி ஆகியவை மிக நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு ஜூலை 12, 13-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) நடக்க உள்ளது. மேற்கு வானில் சூரியன் மறைந்த பிறகு சுமார் 45 நிமிடங்கள் கழித்து இந்த நிகழ்வை காணலாம்.

அப்போது செவ்வாய், வெள்ளி கோள்களுக்கு இடையே 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும். மேலும், வெள்ளி, செவ்வாய் கோள்களுக்கு அருகேசந்திரன் தென்படும். மிக அற்புதமான இந்த காட்சியை வெறும் கண்களால் பார்க்கலாம். கோள்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதையும் நாளை முதல் காணமுடியும்.

இதுபோன்ற நிகழ்வு கடந்த 2019 ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற்றது. ஆனால், சூரியனுக்கு மிக அருகில் இருந்ததால் தெளிவாக காணமுடியவில்லை. இதேபோன்ற நிகழ்வு மீண்டும் 2024 பிப்ரவரி 22-ம் தேதி தென்படும்.

ஆனால், இன்றைய நிகழ்வு போல மிக நெருக்கமாக காண்பதற்கு 2034 மே 11-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

இத்தகைய நிகழ்வுகள்,அவ்வப்போது வானில் நிகழக்கூடியவை என்றாலும், நாம்வெறும் கண்களால் அவற்றை தெளிவாக காண இயலாது. எனவே, வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய இந்த நிகழ்வைஅனைவரும் தங்கள் குடும்பத்தினருடன், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கண்டு மகிழ வேண்டும்.

படங்களை அனுப்பலாம்...

இந்த நிகழ்வை புகைப்படம் எடுப்பவர்கள் outreach@iiap.res.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் படங்களை அனுப்பி வைக்கலாம். தேர்வாகும் படங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x