Published : 12 Jul 2021 03:12 AM
Last Updated : 12 Jul 2021 03:12 AM

‘ஒன்றிய அரசு'க்கு பதிலடியா ‘கொங்கு நாடு'?- திமுக-பாஜக மோதலாக உருவெடுத்துள்ள சர்ச்சை

சென்னை

மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என்ற அழைத்து வரும் திமுகவினருக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், 'கொங்கு நாடு' தனி மாநில கோரிக்கையை ஆதரிக்கும் வகையில் தமிழக பாஜகவினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவது, இரு கட்சிகளுக்கு இடையிலான மோதலாக உருவெடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மே 2-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. திமுக ஆட்சி அமைப்பது உறுதியானதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று அழைக்கத் தொடங்கினர்.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த பாஜகவினர், "பிரிவினைவாத உள்நோக் கத்துடன் திமுகவினர் 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இந்தியா என்ற நாடு நிலையானது. நிர்வாகவசதிக்காகவே மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் சேர்ந்து இந்தியா என்ற நாட்டை உருவாக்கவில்லை" என்றனர்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 23-ம் தேதி பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “மாநில சுயாட்சி என்ற பொருள் அடங்கியிருப்பதால் 'ஒன்றிய அரசு' என்று அழைக்கிறோம். 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தையைக் கண்டு மிரள வேண்டாம். அதைப் பயன்படுத்திக் கொண்டே இருப்போம்" என்றார்.

இந்த சூழலில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றார். அப்போது மத்திய அரசு வெளியிட்ட விவரக் குறிப்பில், எல்.முருகன் பிறந்த நாமக்கல் மாவட்டத்தை 'கொங்கு நாடு' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தமிழகத்திலிருந்து கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களைப் பிரித்து 'கொங்கு நாடு' உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக ஆதரவாளர்கள் முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பிரச்சாரமாக முன்னெடுத்துள்ளனர்.

இந்த 'கொங்கு நாடு' தனி மாநிலக் கோரிக்கையை பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் தங்களது முகநூல் பக்கத்தில் பகிர, இந்த விவகாரம் திமுக-பாஜக மோதலாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலிருந்து தமிழகத்தைப் பிரிக்கும் உள்நோக்கத்துடன் திமுக 'ஒன்றியஅரசு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி யிருக்கிறது. அதற்குப் பதிலடியாக 'கொங்கு நாடு' தனி மாநில கோரிக்கையை முன்னெடுத்திருக்கிறோம் என்று பாஜக ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின் றனர்.

புதிய மத்திய அமைச்சர்கள் பற்றிய விவரக் குறிப்பில் 'கொங்கு நாடு' என்று குறிப்பிடப்பட்டிரு்தது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் கேட்டபோது, “கொங்கு நாடு என்ற வார்த்தை ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளதுதான். அதில் தவறு எதுவும் இல்லை" என்றார்.

கொங்கு நாடு சர்ச்சை குறித்து தமிழக பாஜக பொதுச் செயலர் கரு.நாகராஜனிடம் கேட்டபோது, “மக்கள் விருப்பத்தின் அடிப்படையில்தான் இதுவரை மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அப்படித்தான் கடைசியாக ஆந்திரத்திலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டது. மக்கள் விரும்பினால் புதிய மாநிலங்கள் உருவாகலாம். மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவது அரசின் கடமை. 'ஒன்றிய அரசு' என்று சொல்வது திமுகவினரின் விருப்பம். அதுபோல 'கொங்கு நாடு' என்று சொல்வது அப்பகுதி மக்களின் விருப்பம்" என்றார்.

திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதியை தொடர்பு கொண்டபோது, 'கொங்குநாடு' விவகாரம் குறித்து எதுவும் பேச மறுத்துவிட்டார். ஆனால், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி, “தமிழகத்தை யாராலும் பிரிக்க முடியாது. அந்த கனவெல்லாம் யாரும் காண வேண்டாம். பாதுகாப்பான ஆட்சியின் கீழ் இருப்பதால் தமிழகம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். அரசியல் சட்டத்திலேயே ‘ஒன்றிய அரசு' என்றுதான் இருக்கிறது. அது நாட்டுக்கு எதிரானது அல்ல" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x