

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மூடப்பட்ட வடக்கு, மேற்கு, தெற்கு வாசல்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய 4 திசைகளிலும் வாசல்கள் உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வடக்கு, மேற்கு, தெற்கு வாசல்கள் மூடப்பட்டன. கிழக்கு பகுதியில் உள்ள பிரதான வாசல் வழியாக மட்டும் பக்தர்கள் கோயிலுக்குள் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு, மெட்டல் டிடெக்டர் கருவியுடன் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நெல்லையப்பர் கோயிலில் ஆய்வு செய்தார். அப்போது, பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோயிலின் வடக்கு,மேற்கு, தென்புற நுழை வாயில்கள் விரைவில் திறக்கப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து, கடந்த 17 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த 3 வாயில்களையும் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் 3 வாசல் பகுதிகளையும் சுத்தம் செய்தனர். நேற்று காலை 11 மணியளவில் வடக்கு, மேற்கு, தெற்கு நுழைவு வாயில்களுக்கு மேளவாத்தியம் முழங்க தீபாராதனை காண்பித்து திறக்கப்பட்டன. கோயில் செயல் அலுவலர் ராமராஜா மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து கோயில் பணியாளர்கள் கூறும்போது, “ஐப்பசி திருக்கல்யாண விழாவில் அம்பாளுக்கு பொட்டு சாத்த வரும்போது தெற்கு வாசலும், ஆனி பிரம்மோற்சவ விழாவின்போது மேற்கு மற்றும் வடக்கு வாசல்களும் திறக்கப்பட்டன. மற்ற நாட்களில் இவை மூடப்பட்டிருக்கும்” என்றனர். திறக்கப்பட்ட 3 வாசல்கள் வழியாக ஏராளமான பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். 4 வாயில்களிலும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.