

தருமபுரி அருகே கிராமத்தின் பசுமையை மீட்க 3,000 மரக்கன்றுகளை நடவு செய்து பயன்பாடற்ற கிணற்றை சீரமைத்து அதன் தண்ணீரை மரக்கன்றுகளை பராமரிக்க பயன்படுத்தும் பணியில் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மூக்கம்பட்டி, பெரிய சவுளூர், சின்ன சவுளூர்,பாடி, கண்ணுகாரம்பட்டி, கவரன்கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் 5000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதானத் தொழில் விவசாயம். கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியில் மழை இல்லாததால், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் விவசாய பணி மற்றும் விவசாய கூலிப்பணிக்கு சென்ற பலரும் பெங்களூரு, கோவை போன்ற ஊர்களுக்கு பிழைப்புத் தேடி செல்லும் நிலையுள்ளது.
இந்நிலையில், அப்பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர் பாடி ஊராட்சியில் பசுமை பரப்பை அதிகரித்து குளிர்ந்த சூழலை உருவாக்கி மழை அதிகம் பெற வழி ஏற்படுத்த திட்டமிட்டனர்.
இதற்காக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைத்து பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி, கால்வாய் போன்ற நீர்நிலைப் பகுதிகள், சாலையோரப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கினர். கடந்த சில ஆண்டுகளில் 3,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இப்பகுதியில் நட்டு பராமரித்து வருகின்றனர்.
வறட்சி காலங்களில் இந்த மரக்கன்றுகளை உயிரிழப்பில் இருந்து காக்க விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றி வந்தனர். தொடர்ந்து இதை செயல்படுத்த பொருளாதார சூழல் கைகொடுக்கவில்லை. எனவே, அப்பகுதி அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்த சமூக ஆர்வலர்கள், ‘பீனிக்ஸ்’ என்ற அமைப்பு உருவாக்கினர்.
கடந்த ஆண்டு முதல் கரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டில் இருந்து படித்து வருகின்றனர். இவர்களை ஒன்று திரட்டி, அப்பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் குடிநீருக்காக அமைக்கப்பட்டு பயன்பாடற்று கிடந்த கிணற்றை ஆழப்படுத்தி சீரமைக்கும் பணியில் இறங்கினர்.
இவர்களின் தீவிர முயற்சியால் புதுப்பொலிவு பெற்ற அந்தக் கிணற்றில் தற்போது தினமும் 20 அடி ஆழம் வரை தண்ணீர் ஊறுகிறது. இந்த தண்ணீர் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
இதுதொடர்பாக பீனிக்ஸ் அமைப்பினர் கூறியதாவது:
எங்கள் பகுதியில் மழையை அதிகரிக்கும் நோக்கத்துடன் தொடங்கிய நீண்டகால திட்டம் மரக்கன்றுகள் நடவு செய்வது. இவ்வாறு நட்டு வளர்த்த மரக்கன்றுகள் பாதியில் மடிந்து போவதை பார்க்க வேதனை அளித்தது. எனவே, பயன்பாடற்ற கிணற்றை ஆழப்படுத்தி தண்ணீர் ஆதாரத்தை உருவாக்கினோம்.
இதில் இருந்து வாரத்தில் 3 நாட்கள் சுழற்சி முறையில் மரக்கன்றுகளுக்கு நீரை பாய்ச்சுகிறோம். இதர நாட்களில் கிணற்று நீர் கிராம மக்களுக்கு பயன்பட்டு வருகிறது. மேலும், இந்த நீர் உதவியுடன் மரக்கன்று நர்சரி ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அதில் உற்பத்தி செய்யும் மரக்கன்றுகளை தேவைப்படுவோருக்கு இலவச மாக வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.