

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்சார்பில், கைவினை சிற்பங்களின் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவி மூலம் ரூ.5 கோடி மதிப்பில், கடற்கரை சாலையையொட்டி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், விற்பனை நிலையங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான பூங்கா, ஓய்வறை, உணவுக் கூடங்கள் அமைந்துள்ளன. எனினும், விற்பனை நிலையத்தில் கலைஞர்களுக்கு கடைகள் ஒதுக்குவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாலும், சரியான திட்டமிடல் இல்லாததாலும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இதற்கு வரவேற்பு இல்லை. இதனால் இங்கு கடைகள் அமைக்க கைவினைக் கலைஞர்கள் தயக்கம் காட்டும் நிலை உள்ளது.
இந்நிலையில், கைவினை சிற்பக் கண்காட்சி மற்றும் விற்பனை மையத்தை ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
பின்னர், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார் நிறுவனம்) மூலம் மாமல்லபுரத்தை அடுத்த காரணை கிராமத்தில் ரூ.1.80 கோடி மதிப்பில் நடைபெறும் கைவினை சுற்றுலா கிராமத் திட்டம், கைவினைக் கலைஞர்களின் குடியிருப்புகளை அழகுபடுத்துதல், ஐந்து ரதம் பகுதியில் கைவினைக் கலைஞர்களின் விற்பனை நிலையங்களை புதுப்பித்தல், மாமல்லபுரம் நகரின் நுழைவுவாயில் பகுதியில் கலைநயத்துடன் கூடிய ஸ்தூபி அமைத்தல் ஆகிய பணிகளையும் ஆய்வு செய்தார்.
திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் ஷோபனா, எம்.பி. செல்வம், எம்எல்ஏ பாலாஜி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.