Published : 12 Jul 2021 03:13 AM
Last Updated : 12 Jul 2021 03:13 AM

ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

கரோனா பேரிடர் காலத்தில் நம்மை நாமே தற்காத்துக் கொள்வதற்கு உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு ஏதுவாக ‘ஓடலாம் நோயின்றி வாழலாம்’ என்ற நோக்கத்தை உணர்த்தும் வகையில், லண்டன் மெய்நிகர் 129-வது மாரத்தான் போட்டியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை கிண்டியில் தொடங்கி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் 2 மணி நேரம் 8 நிமிடங்களில் நிறைவு செய்து பதக்கத்தை வென்றார்.

சென்னை

ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

‘ஓடலாம் நோயின்றி வாழலாம்’ என்ற இலக்கோடு சென்னையில் நேற்று நடைபெற்ற மாரத்தானில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். மாரத்தான் நிறைவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்றுக்கு இடையே ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அவசியம். கரோனா பேரிடர் காலத்தில் உடற்பயிற்சி என்பது இன்றியமையாதது என்பதை எடுத்து விளக்கும் வகையில் 129-வது மாரத்தான் போட்டியை நிறைவு செய்துள்ளேன். ஏறத்தாழ 2 மணி நேரம் 8 நிமிடங்களில் 21 கிமீ தூரத்தை கடந்திருக்கிறோம். பிரிட்டன், இத்தாலி, நார்வே, கத்தார், சிங்கப்பூர், ஆஸ்ட்டிரியா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலும், இந்தியாவில் 20 மாநிலங்களிலும் நானும், எனது குழுவினரும் ஓடியிருக்கிறோம். டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக செய்திகள் வருவதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. இரண்டாயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு ஒரே மாதத்தில் பதிவாகவில்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் படிப்படியாக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கும், சுகாதாரத் துறை பணியாளர்கள் அனைவருக்கும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தேவை இல்லாமல் தேங்கி இருக்கும் நீரை அகற்றுவது போன்றபணிகளை செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. அனைத்து இடங்களிலும் கொசு மருந்து தெளிப்பது, புகை மருந்து அடிப்பது போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சென்னையைப் பொறுத்தவரை ட்ரோன் மூலம் அனைத்து நீர்நிலைகளிலும் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. டெங்குவை தொடர்ந்து ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x