

விக்கிரவாண்டி அருகே 3 ஆண்டுகளாக விண்ணப்பித்தும் முதியோர் உதவி தொகை கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் கோரிக்கை விடுத்த மூதாட்டிக்கு அதே இடத்தில் ஆவணங்களை ஆய்வு செய்து உதவி தொகை வழங்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் காணை ஊராட்சி ஒன்றியத்தில் பனமலை ஊராட்சி, கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாதிரிமங்கலம் ஊராட்சி, ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் பட்டணம் ஊராட்சி, வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் கொழுவாரி ஊராட்சி மற்றும் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரும்பட்டு ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் அமைந்துள்ளன. நேற்று அப்பகுதிகளில் ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.
அப்போது கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் மாதிரிமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஆய்வு மேற்கொண்டார்.அங்குள்ள 100 வீடுகள், தெருவிளக்குகள், தார் மற்றும் சிமெண்ட் சாலைகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் கூடிய குடிநீர் வசதி, நியாயவிலை கடை, தந்தை பெரியார் வெண்கல சிலை, நுழைவாயில் பலகை, சமுதாய கூடம், குடிநீர் பைப்லைன் மற்றும் பொழுதுபோக்கு அறை, சுகாதார நிலையம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தேன்மொழி என்ற மூதாட்டி, ஆட்சியரை அணுகி, கடந்த 3 வருடங்களாக முதியோர் ஓய்வூதியத்துக்காக விண்ணப்பித்தும் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என கோரிக்கை வைத்தார். பின்னர் அவரது ஆவணங்களை ஆய்வு செய்த ஆட்சியர், அவருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார்.
பின்னர் பழுதடைந்துள்ள வீடுகள் பழுதுநீக்கம் செய்திடுவது, சமத்துவபுர அணுகு சாலை மற்றும் சமத்துவபுரத்தில் உள்ள சாலைகளை மேம்படுத்துதல், தெருவிளக்குகள் முழுமையாக எரிவதை உறுதி செய்தல், குடிநீர் பைப்லைன்களை மாற்றி அல்லது பழுதுநீக்கம் செய்தல், சமுதாய கூடம், பொழுதுபோக்கு அறை மற்றும் நிலைய கட்டடம் சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள தயாரிக்கப்பட்ட மதிப்பீடுகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராஜா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.