நான்கு ஆண்டுகளாக தொடரும் தவிப்பு; கிரண்பேடி அமல்படுத்திய நடைமுறையால் மாத ஊதியம் சரியாக கிடைப்பதில்லை: 21 சொசைட்டி கல்லூரி ஊழியர்கள், பேராசிரியர்கள் புகார்

நான்கு ஆண்டுகளாக தொடரும் தவிப்பு; கிரண்பேடி அமல்படுத்திய நடைமுறையால் மாத ஊதியம் சரியாக கிடைப்பதில்லை: 21 சொசைட்டி கல்லூரி ஊழியர்கள், பேராசிரியர்கள் புகார்
Updated on
2 min read

இடையூறின்றி மாத ஊதியம் வழங்குமாறு புதுச்சேரி அரசு 21 சொசைட்டி கல்லூரி ஊழியர்கள், பேராசிரியர்கள் கோருகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை நிதி ஒப்புதல் பெறும் முறையை மாற்றி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒப்புதல் பெற வேண்டும் என்று அப்போதைய ஆளுநர் கிரண்பேடி அமல்படுத்திய நடைமுறை தொடர்வதால் மாத ஊதியம் சரியாக கிடைப்பதில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 1986-ம் ஆண்டு முதல் புதுவை அரசு பல உயர்கல்வி நிறுவனங்களை, 13 உயர்கல்வி குழுமங்களின் மூலம் நிர்வகித்து வருகிறது. இவ்வாறாக மொத்தம் 21 உயர்கல்வி நிறுவனங்கள் புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் சார்பு துறைகள் மூலம் முழுமையான நிதி வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 1,000 பேராசிரியர்களும், 4,500 ஆசிரியரல்லாத ஊழியர்களும் இந்த உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

பல் மருத்துவம், பட்டமேற் படிப்பு, கலை அறிவியல், வேளாண்மை, கால்நடை மருத்து வம், கல்வியியல் மற்றும் பல்கலை பாடப்பிரிவுகளில் தரம் வாய்ந்த உயர்கல்வியை இந்த உயர்கல்வி நிறுவனங்கள் 20,000 மேற்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகின்றன. கடந்த 2016-17-ம் நிதியாண்டு வரை இந்நிறுவனங்களின் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு உரிய முறையில் மற்ற அரசு ஊழியர்களுக்கு இணையாக எந்தவித பாரபட்சமும் இன்றி ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக இவர்கள் கடும் பாதிப்பில் உள்ளனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி அரசு சொசைட்டி கல்லூரிகளின் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் ராம்குமார் கூறுகையில், “கடந்த 4 ஆண்டுகளாக அதாவது, 2017-18 நிதியாண்டு முதல் ஊதியம் சரிவர வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான நேரங்களில் மாதக்கணக்கில் ஊதியம் இழுத்தடிப்பு செய்யப்பட்டது.

இதற்கெல்லாம் காரணம் அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிதித்துறையின் செயல்பாட்டில் கொண்டுவந்த கடுமையான கட்டுப்பாடுகளே என்று அரசு தரப்பில் குறிப்பிட்டனர். உதாரணமாக கடந்த 2017 நிதியாண்டு வரை வழங்கப்பட்ட ஆண்டுக்கு ஒருமுறை ஒப்புதல் முறையை மாற்றி மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒப்புதல் முறையை அமல் படுத்தியதன் மூலம் உரிய நேரத்தில் இந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதி கிடைப்பது தடுக்கப்பட்டது.

இதனால் உரிய முறையில் தங்களது குடும்பங்களை பராமரிக்க முடியாமலும், வங்கி கடன் மாதத் தவணைகளை உரிய நேரத்தில் கட்ட முடியாமலும் ஆசிரியர்களும் ஊழியர்களும் தவித்து வருகின்றனர். இதுபற்றி அப்போதைய துணைநிலை ஆளுநர், நிதித்துறைச் செயலர் ஆகியோரிடம் எடுத்துரைத்தும் எந்தப் பலனும் இல்லை. எனவே 2017-க்கு பிறகு கொண்டுவரப்பட்ட இந்த கடுமையான கட்டுப்பாடுகளை கலைத்து, அதற்கு முன்பிருந்தது போல் ஆண்டுக்கு ஒருமுறை ஒப்புதல் கொடுத்து இந்த 21 உயர்கல்வி நிறுவனங்களுக்கும் உரிய நிதியை ஒதுக்க வேண்டும். உதாரணமாக கடந்த மாத ஊதியம் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை” என்றார்.

பொருளாளர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், “ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடையற்ற மாத ஊதியத்தை, மற்ற அரசு ஊழியர்களுக்கு தருவது போல் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று ஆளுநர், முதல்வர், நிதித்துறை செயலரிடம் மனு தந்துள்ளோம்.

ஆண்டுக்கு ஒருமுறை ஒப்புதல் என்ற முறையை நடைமுறைப் படுத்தவும் கோரியுள்ளோம். 2021-22 நிதிநிலை அறிக்கையில் இதை செயல்படுத்தவும் கோரி யுள்ளோம்” என்று குறிப்பிட்டனர்.

கடந்த 4 ஆண்டுகளாக அதாவது, 2017-18 நிதியாண்டு முதல் ஊதியம் சரிவர வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான நேரங்களில் மாதக்கணக்கில் ஊதியம் இழுத்தடிப்பு செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in