

‘‘ஆன்மிகம், தமிழ் மொழிக்காக பாடுபட்டவர் குன்றக்குடி அடி களார்,’’ என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் செய்தி-மக்கள் தொடர்புத் துறை சார்பில் குன்றக்குடி அடிகளார் பிறந்த நாள் விழா நடந்தது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் குன்றக்குடி அடிகளார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
குன்றக்குடி அடிகளாரின் தமிழ் இலக்கியங்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகி யோரால் பாராட்டப் பெற்றவை. ஆன்மிகம், அறிவொளி, தமிழ் மொழி பாதுகாவலராகவும் திகழ்ந் துள்ளார்.
அறுபது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு துறவியாக வாழ்ந்து தமிழுக்கு தொண்டாற்றிய அவருக்கு மணிமண்டபம் கட்டி சிலை வைத்தது கருணாநிதி தான். மேலும் அவரது பிறந்த தினத்தை அரசு விழாவாகக் கொண்டாடவும் நடவடிக்கை எடுத்தார் என்றார்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஒன்றியக் குழுத் தலைவர்கள் சண்முகவடிவேலு, சொர்ணம் அசோகன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, வட்டாட்சியர் ஜெயந்தி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக காலையில் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி குன்றக்குடி அடிகளார் சிலைக்கு மாலை அணிவித்தார்.