

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் என்.முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்), ‘‘காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பிடாரித் தெரு, பேரரசி தெருக்களில் வீரநாராயணப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாக வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டம் அரசிடம் உள்ளதா?’’ என கேள்வி எழுப்பினார்.
அவருக்கு பதிலளித்த அமைச்சர் காமராஜ், ‘‘தமிழகத்தில் கோயில்களுக்கு நிலங்களை தானமாக அளித்தவர்கள், ‘சூரியன், சந்திரன் இருக்கும்வரை இந்த நிலங்கள் கோயில்களுக்கு சொந்தமாக இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர். எனவே, இந்து சமய அறநிலைக் கொடைகள் சட்டம் 1959 (22)-ன்படி கோயில் மனைகளை தனி நபர்கள் யாருக்கும் பட்டா வழங்க முடியாது. காட்டுமன்னார்கோவில் வீரநாராயணப் பெருமாள் கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள் வாடகைதாரர்களாக முறைப்படுத்தப்பட்டு வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.