Published : 12 Jul 2021 03:14 AM
Last Updated : 12 Jul 2021 03:14 AM

அரசுப் பள்ளி, கல்லூரிகளிலும் தனியாருக்கு நிகராக உயர்தர கல்வி: அமைச்சர் பி.கே.சேகர் பாபு உறுதி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் பூம்புகார் கலை அறிவியல் கல்லூரியில் உள்ள வகுப்பறைகளை நேற்று முன்தினம் இரவு பார்வையிடுகிறார் அமைச்சர் பி.கே.சேகர் பாபு.

மயிலாடுதுறை

தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளி, கல்லூரிகளிலும் உயர்தர கல்வி வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் பூம்புகார் கலை அறிவியல் கல்லூரியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தார். அப்போது, பூம்புகார் கல்லூரியில், மாணவ, மாணவிகளின் வகுப்பறைகளை பார்வையிட்ட அவர், மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களைக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, ரூ.3.99 கோடி மதிப்பில் 24,900 சதுர அடி பரப்பளவில் 2 தளங்களில் கணினி வகுப்பறையுடன் கூடிய 24 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருவதை அவர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்கு நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில், கல்லூரி பேராசிரியர்களிடம் கல்லூரி வளர்ச்சி தொடர்பான கருத்துகளை கேட்டறிந்தார்.

பின்னர், அமைச்சர் கூறியது: பூம்புகார் கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில், கடந்த 10 ஆண்டுகளாக மாணவ, மாணவிகளின் சேர்க்கை குறைந்து வருவது ஆய்வின்போது தெரியவந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளின் தேவைகள் அறியப்பட்டு, அவை அறிக்கையாக தயார் செய்யப்பட்டு, முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

தேவையான நிதி முதல்வரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளி, கல்லூரிகளிலும் உயர்தர கல்வி வழங்கப்படும். கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் முழு ஈடுபாட்டுடன் பேராசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என்றார்.

ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் ரா.கண்ணன், எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், கோட்டாட்சியர் நாராயணன், பூம்புகார் கல்லூரி முதல்வர் அறிவொளி ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x