

சேலம் மாநகரில் 22 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்வியல் தத்துவங்களை எழுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும், ஊக்கத்தையும் அளித்து வரும் முதியவருக்கு கோவையைச் சேர்ந்த நடன ஸ்டூடியோ விருது வழங்கி கவுரவித்துள்ளது.
சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் பசுபதிநாதன். இவர், சேலம் மாநகரில் பொது சுவர்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஊக்கம் அளிக்கும் விதமாக வாழ்வியல் தத்துவங்கள், பொன்மொழிகள் அடங்கிய வாசகங்களை கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார்.
கூலி வேலைக்குச் சென்று வாழ்க்கையை நடத்தி வரும் இவர், மாநகரில் 30 இடங்களில் உள்ள சுவர்களில் சொந்த செலவில் ஒவ்வொரு வாரமும் புதிது புதிதாக விழிப்புணர்வு தகவல்களை எழுதி வருகிறார். எம்.எம்.எம். என்ற பெயரில் சுவர்களில் எழுதி வரும் இவருக்கு, சேலம் மாநகர மக்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இவரது சமூக பங்களிப்பை பாராட்டும் விதமாக பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளது.
இதேபோல், கோவை ராமநாதபுரத்தில் செயல்படும் ‘21 டான்ஸ் ஸ்டூடியோ' நடத்திய நடன நிகழ்ச்சியில் பசுபதிநாதனின் சேவையை பாராட்டும் விதமாக சாதனையாளர் விருது வழங்கியது.