

வாணியம்பாடி அருகே பழமை வாய்ந்த ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி விவசாய நிலத்தில் நுழைந்ததால், 40 ஏக்கரில் பயிரிடப்பட்ட வேர்க்கடலை, நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானதால் விவசாயிகள் வேதனையடைந் துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதியிலும், நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால், வாணியம்பாடி யொட்டியுள்ள மண்ணாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதற்கிடையே, கடந்த 8-ம் தேதி இரவு வாணியம்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் விடிய, விடிய பெய்த கனமழையால் புல்லூர் தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதனால், திம்மாம்பேட்டை, அலசந்தராபுரம், நாராயணபுரம், கொடையாஞ்சி, அம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாலாற்றில் 3 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வந்தன. இந்நிலையில், வாணியம்பாடி வட்டம், நாராயணபுரம் ஊராட்சி தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஜவ்வாது ராமசமுத்திரம் ஏரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது.
ஏரியின் கரை சிதலமடைந்து இருப்பதாலும், ஏரிக்கு தொடர்ந்து நீர் வந்துக்கொண்டிருப்பதாலும் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் அருகாமையில் உள்ள விவசாய நிலங்களுக்குள் நுழைந்தது. இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் லட்சுமணன், பிரபு, குமார் மற்றும் மதிவாணன் ஆகியோருக்கு சொந்தமான 40 ஏக்கரில் பயிரிடப்பட்ட வேர்க்கடலைகள், நெற்பயிர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து நாராயணபுரம் ஊராட்சியைச் சேர்ந்த விவசாயி கள் கூறும்போது, ‘‘ஜவ்வாது ராமசமுத்திரம் ஏரி 300 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த ஏரி மூலம் நாராயணபுரம், அலசந்தாபுரம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. தொடர் மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து தற்போது ஏரி நிரம்பி வெளியேறி வரும் உபரி நீரானது அருகாமையில் 40 ஏக்கர் விவசாய நிலத்தில் குட்டைப்போல் தேங்கியுள்ளதால் அங்கு பயிரிடப்பட்ட வேர்க்கடலை, நெற் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால், வேர்க்கடலை பயிரிடப்பட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு லட்சக் கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏரியின் இரண்டு புறங்களிலும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
இதனால், தற்போது பெய்த கனமழையால் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. இனியாவது, மாவட்ட நிர்வாகம் ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.