

நாமக்கல் முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் அதிமுகவில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைந்தார். இது நாமக்கல் மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் அக்கட்சியில் இருந்து விலகி, இன்று (ஜூலை 11) தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்தார். இது நாமக்கல் மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்காததே அவர் விலகலுக்குக் காரணமாகவும் அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட அதிமுகவினர் கூறுகையில், "நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகளில் பி.ஆர்.சுந்தரமும் ஒருவர். கட்சியில் மாவட்ட அவைத்தலைவராக இருந்தார். கடந்த 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தபோது, அதிமுக சார்பில் வெற்றி பெற்ற நான்கு பேரில் இவரும் ஒருவர்.
அதேபோல், கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு, 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மாநில அளவில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களில் பி.ஆர்.சுந்தரம் முதல் இடத்தில் இருந்தார்.
இச்சூழலில், 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா இல்லாததுடன் கட்சித் தலைமையும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கைக்கு மாறியது.
இதில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக பி.ஆர்.சுந்தரம் இருந்தேபோதும், அவருக்கு 2-வது முறையாக எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, மாவட்ட ஊராட்சிக்குழு பதவிக்கு போட்டியிட்டு மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.
இச்சூழலில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்தார். கட்சி மேலிடத்திலும் சீட் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். எப்படியும் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பதவியையும் பி.ஆர்.சுந்தரம் ராஜினாமா செய்தார். எனினும், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை.
இதனால், கட்சி மேலிடம் மீது பி.ஆர்.சுந்தரம் அதிருப்தியில் இருந்தார். தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவி, ஆட்சியை இழந்த பின் கட்சியில் தனக்கான முக்கியத்துவம் மேலும் குறைந்ததாக அவர் கருதினார். இந்த அதிருப்தி காரணமாக, பி. ஆர். சுந்தரம் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டார்" என்றனர்.