Published : 11 Jul 2021 07:22 PM
Last Updated : 11 Jul 2021 07:22 PM

கரோனாவால் தள்ளிப்போகும் மதுரை 'மல்லிகை டே' கொண்டாட்டம்

பிரதிநிதித்துவப் படம்

மதுரை

மல்லிகைப்பூவுக்கு பிரசித்திப்பெற்ற மதுரையில் 'மல்லிகை டே' கொண்டாட தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பரிந்துரை செய்தும் இதுவரை தோட்டக்கலைத்துறை ஆண்டுதோறும் 'மல்லிகை டே' கொண்டாடவில்லை.

மல்லிகைப்பூக்கள் தமிழகம் முழுவதும் உற்பத்தியானாலும் மதுரை மல்லிகைக்கு உள்ளூர் சந்தைகள் முதல் உலக சந்தைகள் வரை ஆண்டு முழுவதும் வரவேற்பு உண்டு. அதனால், மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மல்லிகைப்பூதான்.

மதுரை மண்ணில் கந்தக சத்து காணப்படுவதால், மற்ற மாவட்டங்களில் விளையும் மல்லிகைப்பூவை விட மதுரை மல்லிகைக்கு மணமும், நிறமும் அதிகம். பார்க்க அழகாக பருத்து உருண்டையாக வெண்மையான நிறத்தில் 'பளபள'வென இருப்பது மதுரை மல்லிகைக்கு தனி சிறப்பு.

மற்ற ஊர்களில் விளையும் மல்லிகைப் பூக்கள் விரைவாக வாடிவிடும். ஆனால், மதுரை மல்லிகைப்பூக்கள் நெருக்கமான இதழ்களை கொண்டுள்ளதால், எளிதில் வாடிபோகாது. இரண்டு நாள்கள் வரை வாடாமல் இருக்கும்.

மதுரை மல்லிகைப்பூக்கள், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. மதுரை மல்லிகையின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், இந்த பூக்களை அழியாமல் தடுக்கவும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் தற்போது 2,500 ஹெக்டேரில் மல்லிகைப்பூ பயிரிடப்படுகிறது. திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுரை மல்லிகை உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயிகள், 25 சென்ட் முதல் ½ ஏக்கர் வரை மல்லிகைப்பூ சாகுபடி செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரம் குடும்பங்கள், இந்த மல்லிகைப்பூ சாகுபடியில் ஆண்டு முழுவதும் ஈடுபட்டுள்ளனர். 3 ஆயிரம் குடும்பத்தினர் குடிசைத்தொழில் போல் மல்லிகைப்பூக்களை விவசாயிகளிடமும், வியாபாரிகளிடம் வாங்கி மாலை கட்டி விற்பனை செய்கின்றனர்.

அதனால், நேரடியாகவும், மறைமுகமாகவும் மல்லிகைப்பூ சாகுபடியில் வர்த்தக பரிமாற்றமும், நிரந்தர வேலைவாய்ப்பும் இந்த மாவட்ட மக்கள் பெற்றுள்ளனர். இந்த பூ சாகுபடியில் கோடை காலத்தில் மகசூல் அதிகமாக இருக்கும். குளிர் காலத்தில் மொட்டுகள் கருகி மகசூல் குறையும்.

தற்போது மல்லிகைப்பூ போன்ற மற்ற ரக பூக்களை கலந்து வியாபாரிகள் போலியாகவும் விற்கத்தொடங்கியுள்ளனர். அந்த பூக்களில் மதுரை மல்லிக்கான மணமும், நிறமும் இல்லை. காலப்போக்கில் இந்த மல்லிகைப் போலிப்பூக்கள் உருவாக்கமும், பயன்பாடும் அதிகரித்ததால், பாரம்பரிய மதுரை மல்லிப்பூக்கள் தன்னுடைய பெருமையையும், தனிச்சிறப்பையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதனால், மல்லிகைப்பூ உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் புவிசார் குறியீடு மட்டும் பெற்றால் போதாது, மல்லிகைக்கு புகழ் பெற்ற மதுரையில் ஆண்டுதோறும் 'மல்லிகை டே' கொண்டாட தோட்டக்கலைத்துறைக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 3 ஆண்டுக்கு முன் பரிந்துரை செய்தது.

ஆனால், தற்போது வரை மதுரை மல்லிகைப்பூவை பெருமைப்படுத்தும் வகையில், தோட்டக்கலைத்துறை இதுவரை 'மல்லிகை டே' கொண்டாடவில்லை. அதற்கான முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

இது குறித்து, தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "மல்லிகைப்பூ உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், மல்லிகைப்பூக்களை கட்டி விற்கும் தொழிலாளர்கள், மல்லிகைப்பூ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தோட்டக்கலை அதிகாரிகளை அழைத்து கருத்தரங்கு நடத்தப்படுவதோடு, அதன் ஒருங்கிணைந்த சந்தையை ஏற்படுத்துவதும்தான் 'மல்லிகை டே'யின் கொண்டாட்டம்.

'பூ' கட்டுகிறவர்களில் ஆரம்பித்து, விவசாயிகள், வியாபாரிகள் வரை அழைத்து அவர்கள் கருத்துகளையும் கேட்டு, அதன் உற்பத்தி, வணிகத்தை பெருக்குவது பற்றி தோட்டக்கலைத்றை நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்தது.

ஆனால், தற்போது கடந்த ஒன்றரை ஆண்டாக கரோனா ஊரடங்கால் எந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகளையும் நடத்த இயலாத நிலை உள்ளது. மேலும், தற்போது கரோனா மல்லிகை விலையும், அதன் உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளது. கரோனா முடிவுக்கு வந்ததும் 'மல்லிகை டே' கொண்டாட்டம் உறுதியாக நடக்கும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x