பூம்புகார் கலை அறிவியல் கல்லூரியில், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் வரைபடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.
பூம்புகார் கலை அறிவியல் கல்லூரியில், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் வரைபடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.

பூம்புகார் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது: சேகர்பாபு

Published on

பூம்புகார் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த 10 ஆண்டுகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை குறைந்துள்ளது என, அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் பூம்புகார் கலை அறிவியல் கல்லூரியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று இரவு (ஜூலை 10) ஆய்வு செய்தார். பூம்புகார் கல்லூரியில், மாணவ, மாணவிகளின் வகுப்பறைகளை அமைச்சர் பார்வையிட்டு, மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, ரூ.3.99 கோடி மதிப்பில் 24,900 சதுர அடி பரப்பளவில் 2 தளங்களில் கணிணி வகுப்பறையுடன் கூடிய 24 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், கல்லூரி பேராசிரியர்களிடம், கல்லூரி வளர்ச்சி தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:

"பூம்புகார் கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இக்கல்லூரியில் கடந்த 10 ஆண்டுகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை குறைந்து வருவது ஆய்வின்போது தெரிய வந்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கல்லூரி, பள்ளிகளின் தேவைகள் அறியப்பட்டு, அவை அறிக்கையாக தயார் செய்யப்பட்டு, முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. தேவையான நிதி முதல்வரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நிகராக, அரசு பள்ளி, கல்லூரிகளில் உயர்தர கல்வி வழங்கப்படும்.

பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் முழு ஈடுபாட்டுடன் கற்பிக்க வேண்டும்".

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ரா.கண்ணன், எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், கோட்டாட்சியர் நாராயணன், பூம்புகார் கல்லூரி முதல்வர் அறவொழி ஆகியோர் உடனிருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in