Published : 11 Jul 2021 14:34 pm

Updated : 11 Jul 2021 14:34 pm

 

Published : 11 Jul 2021 02:34 PM
Last Updated : 11 Jul 2021 02:34 PM

நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணிக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதிலடி

agri-krishnamurthy-on-paddy-procurement
அக்ரி கிருஷ்ணமூர்த்தி: கோப்புப்படம்

சென்னை

அமைச்சர் சக்கரபாணி சாக்கு போக்கு சொல்லாமல், நெல் கொள்முதலில் கவனம் செலுத்தி, பாடுபட்ட விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும் என, அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று (ஜூலை 11) வெளியிட்ட அறிக்கை:


"சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 8-ம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில், டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களின் இடையூறின்றி கொள்முதலை மேற்கொள்ளவும், நெல் மணிகள் தண்ணீரில் நனைந்து பாழாகாமல் கொள்முதலை விரைவுபடுத்தும்படியும் அரசை கோரியிருந்தார்.

அதற்கு, உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, இடைத்தரகர்கள் இடையூறு பற்றியோ, நெல் கொள்முதல் செய்யப்படாமல் விவசாயிகள் வாரக் கணக்கில் காத்திருப்பது பற்றியோ, மழையினால் நெல் மணிகள் முளைத்துவிடுவதைப் பற்றியோ நேரடியாக பதில் அளிக்காமல், தங்களது அரசு கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்தி உள்ளதாகவும், இரண்டு மாதங்களில் நெல் கொள்முதல் அதிகளவு நடந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்களைக் கூறியுள்ளார்.

சீசன் காலங்களில் எந்தப் பயிர் அதிகம் விளைகிறதோ, அதனுடைய கொள்முதல் அதிகமாகத்தான் இருக்கும். தற்போது நெல் விளைச்சல் காலம். எனவே, தமிழகத்தில் நெல் வரத்து அதிகரித்துள்ளது என்பது இயற்கையான ஒன்று.

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செழித்துள்ளது என்பதை ஒத்துக்கொண்டதற்கு அமைச்சருக்கு நன்றி. தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளே, தமிழகத்தில் விவசாயம் செழித்ததற்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்பதை எவராலும் மறைக்க முடியாது.

* தடுப்பணைகள் கட்டுதல், குடிமராமத்துப் பணிகள் மற்றும் ஏரி, குளங்களை தூர்வாருதல்.

* டெல்டா மாவட்டங்களில், வரத்து வாய்க்கால்கள் காலத்தே தூர்வாரப்பட்டு, குறித்த நேரத்தில் காவிரி நீர் கடைமடைப் பகுதிகள் வரை சென்றடைந்தது.

* விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம்.

* 2016-ல் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ந்து நடைமுறையில் உள்ள இ. கொள்முதல் முறை. இதன்படி, அதிகபட்சம் 48 மணிநேரத்திற்குள் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுதல்.

* தேவைப்படும் இடங்களில் அதிகப்படியான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.

இத்தகைய நடவடிக்கைகளினால், கடந்த கால சாதனையான ஆண்டுக்கு 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல், 2019-20-ல் 32.41 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்தது.

இந்த ஆண்டு மார்ச் வரை சுமார் 30.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. எனவே, 2020-21-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல், சென்ற ஆண்டு சாதனை அளவான 32.41 லட்சம் மெட்ரிக் டன்னைக் காட்டிலும் உயர்ந்து, அதாவது சுமார் 34 முதல் 35 லட்சம் மெட்ரிக் டன் வரை உயர வாய்ப்பு உள்ளது.

மேலும், ஜெயலலிதா அரசின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் நவீன தானிய சேமிப்பு கிடங்குகளை கட்டி, குறைந்த இடத்தில் அதிகளவு தானியங்களை பாதுகாப்பாக சேகரித்து வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், டெல்டா மாவட்ட மையப் பகுதியான மயிலாடுதுறை மாவட்டம், எருக்கூரில் 2018-ம் ஆண்டு சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சைலோ அமைக்கப்பட்டது.

இது, மயிலாடுதுறை மாவட்டத்துக்கு மட்டுமானதல்ல. அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் பொதுவானது. எவ்வளவு நிதியை ஒதுக்கீடு செய்கிறோமோ, அந்தளவு சைலோக்களை கூடுதலாகக் கட்டி தானிய சேமிப்பை அதிகரிக்கலாம். இதனால், தானியங்களும் பாதுகாப்பாக இருக்கும்; விவசாயிகளும் பயனடைவர்.

அமைச்சர் அர.சக்கரபாணி: கோப்புப்படம்

எனவே, ஜெயலலிதா ஆட்சியில் விவசாயிகள், தங்களின் தன்னலம் கருதா உழைப்புக்கான முழு பயனை இடைத்தரகர்கள் இடையூறின்றி அடைந்தனர்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக் காட்டிய குறைகளான, நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களின் இடையூறு பற்றியோ, மழையில் நெல்மணிகள் நனைந்து முளைத்து வீணாவதைப் பற்றியோ அமைச்சர் நேரடியாக பதில் அளிக்காமல், தலையை சுற்றி மூக்கைத் தொட்டுள்ளார்.

அமைச்சர் தினமும் தொலைக்காட்சி செய்திகளை பார்ப்பதில்லையோ, தினசரி செய்திகளை படிப்பதில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் இந்த மூன்றுக்கும் சொந்தக்காரர்கள் யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

மூட்டைக்கு 3 ரூபாய் கமிஷன் என்றால் என்ன என்பதை அமைச்சரை நீதிபதி சர்க்காரியா கமிஷன் அறிக்கையை படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அமைச்சர், எடப்பாடி பழனிசாமியை விவசாயிதான் என்பதை இப்போதாவது ஒத்துக்கொண்டதற்கு நன்றி. அவர் விவசாயி என்பதால்தான், விவசாயிகளின் துயரங்களை இந்த அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறார்.

கொள்முதல் நிலையங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். தேவைப்படும் இடங்களில் எல்லாம் தற்காலிக கொள்முதல் நிலையங்கள் திறப்பதும், சீசன் முடிவுற்றதும் தற்காலிக நிலையங்களை மூடுவதும் வாடிக்கையான ஒன்று.

எனவே, அமைச்சர், எடப்பாடி பழனிசாமி சுட்டிக் காட்டியபடி, திமுகவினரின் இடையூறின்றியும், தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்தி, நெல் கொள்முதலை விரைவுபடுத்தி, விவசாயிகள் சிந்திய வியர்வைக்கு உண்டான பலனை விரைந்து அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

10.7.2021 அன்றுகூட, தொலைக்காட்சி செய்திகளில், புதுக்கோட்டையில் ஜெயலலிதா ஆட்சியில் தினமும் 900 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இன்று வெறும் 500 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 10,000 நெல் மூட்டைகள் மழையினால் நனைந்து பாதிப்படைந்து உள்ளதாகவும் செய்திகள் படத்துடன் காட்டப்படுகின்றன.

தினசரி நாளிதழ்களில், நெல் கொள்முதல் நிலையங்களில் வாரக் கணக்காக காத்திருக்கும் விவசாயிகளின் நெல் மணிகள் பயிர்களாக முளைத்திருக்கும் படங்கள் வெளிவந்துள்ளன. இவ்வாறு, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 30,000 நெல் மூட்டைகள் மழையினால் நனைந்து பாழாகியுள்ளன என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

எனவே, அமைச்சர் சாக்கு போக்கு சொல்லாமல், நெல் கொள்முதலில் கவனம் செலுத்தி, பாடுபட்ட விவசாயிகளின் துயர் துடைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.


தவறவிடாதீர்!

அக்ரி கிருஷ்ணமூர்த்திஅமைச்சர் அர சக்கரபாணிதமிழக அரசுதிமுகநெல் கொள்முதல்Agri krishnamurthyMinister A chakkarapaniTamilnadu governmentDMKPaddy procurement

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x