

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று திமுகவில் இணைந்தார்.
அதிமுக சார்பாக, 2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் பெருந்துறை தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்றவர் தோப்பு வெங்கடாசலம். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்தார். 2016 தேர்தலில் வென்றும் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. நடந்துமுடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அவர், பெருந்துறை தொகுதியில் போட்டியிட சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால், அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, தேர்தலில் தோல்வியையும் தழுவினார்.
இந்நிலையில், தோப்பு வெங்கடாசலம் இன்று (ஜூலை 11) சென்னை அண்ணா அறிவாலயத்தில், தன் ஆதரவாளர்களுடன் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அப்போது, தோப்பு வெங்கடாசலம் பேசுகையில், "நாங்கள் முதல்வர் ஸ்டாலினை தேடி அவருடைய பாசறைக்கு வந்திருக்கிறோம். நாங்கள் 'நிதி'யைத் தேடி வரவில்லை. நாங்கள் 'உதயநிதி'யை தேடி வந்திருக்கிறோம். நீதி இங்குதான் இருக்கிறது என்று வந்திருக்கிறோம்.
தமிழகத்தின் மாபெரும் சக்தியாக திமுக இருந்தாலும் ஈரோடு மாவட்டத்தில் வெற்றியை பெற முடியவில்லை என்ற உங்கள் ஏக்கத்தைப் போக்கும் அணிலாக நாங்கள் வந்திருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 100% வெற்றியை பெற்றுத் தருவதுதான் எங்களின் ஒரே வேலையாக இருக்கும்.
உறங்கும் நேரத்தைத் தவிர உங்களுக்காக பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். சாதாரண தொண்டனுக்கு அருகிலேயே இருக்கை அமைத்து தோளில் தட்டிக்கொடுக்கும் தாயுள்ளம் கொண்ட தலைவர் ஸ்டாலின்.
இன்று ஈரோடு மாவட்டத்திலிருந்து 900-க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இது மணியோசை தான். தலைவர் அனுமதியும், ஒரு மாதம் அவகாசமும் கொடுத்தால் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 25 ஆயிரம் பேரை திமுகவில் இணைப்போம்" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாற்று இயக்கத்திலிருந்து வந்தாலும் தாயுள்ளத்துடன் மிகப்பெரிய மரியாதையுடன் எங்களை முதல்வர் நடத்தினார். முதல்வர் சிறப்பான நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வருகிறார். இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் செயல்படுகிறார்.
ஊழலற்ற நேர்மையான அரசை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் நேர்வழியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவருடைய பாங்கு எங்களை ஈர்த்தது. பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் என்பதை ஆட்சியமைத்து முதலாவதாக நடைமுறைப்படுத்தியதை இந்தியாவில் அனைவரும் உற்றுப்பார்க்கிறார்கள்.
தமிழகத்தில் நிரந்தர முதல்வராக மக்களால் ஏற்கக்கூடிய முதல்வராக இருக்கிறார். உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்குகிறார். சமூகநீதி வீரராக விளங்கிக்கொண்டிருக்கிறார். அவருடைய அரசியல் பாங்கு வித்தியாசமாக இருக்கிறது.
புதிய ஆட்சி அமைந்தால் பழைய ஆட்சியாளர்களை பழிவாங்கும் மனப்பான்மை இருக்கும். ஆனால், அவர் எந்த திட்டங்களை செயல்படுத்தும்போதும் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளையும் அழைத்து நல்ல கருத்துகளை ஏற்று, தலைமைப்பண்புக்கு உதாரணமாக விளங்குகிறார். இளைஞர்களையும் மகளிரையும் ஈர்க்கும் நல்லாட்சியை நடத்துகிறார்" என தெரிவித்தார்.