Published : 11 Jul 2021 12:14 PM
Last Updated : 11 Jul 2021 12:14 PM

விஜயகாந்துடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

விஜயகாந்த் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அவருடைய இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் மே 7 அன்று பொறுப்பேற்றார். அதன் பின், தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், துணை செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர், முதல்வரை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், நீண்ட நாட்கள் கழித்து இன்று (ஜூலை 11) காலை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த்தின் இல்லத்துக்கு சென்றார். அவருடன் திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர். அவர்களை, எல்.கே.சுதீஷ் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

சில நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நீடித்த நிலையில், மு.க.ஸ்டாலினும் விஜயகாந்த்தும் ஒருவருக்கொருவர் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். முதல்வர், விஜயகாந்த்தின் உடல்நலன் குறித்து விசாரித்தார். மேலும், கரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை தன் கையால் முதல்வரிடம் விஜயகாந்த் வழங்கினார். இந்த சந்திப்பின்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விஜயகாந்த் உடல்நலன் குறித்து விசாரிப்பதற்காக நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படும் நிலையில், 9 மாவட்டங்களில் செப். 15-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தேர்தல் கூட்டணி குறித்தும் பேசப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x