

முத்திரைத்தாள் கட்டணம் வசூலித்ததில் ரூ.20 லட்சத்தை கையாடல் செய்த தனி வட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்திரைத் தீர்வை அலுவலகம் துணை ஆட்சியர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இங்கு தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கான தனி பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனி வட்டாட்சியர்கள் தலைமையிலான குழு உள்ளது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பத்திரப்பதிவுகள் நடைபெறுகிறதா சந்தை மதிப்பீட்டின்படி கட்டணம் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து தனி வட்டாட்சியர்கள் ஆய்வு செய்வர். இதில் கட்டணக் குறைப்பு செய்யப்பட்டது தெரியவந்தால், வட்டாட்சியர் நிர்ணயிக்கும் தொகையை அரசுக்கு செலுத்தி பத்திரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தேனி மாவட்டத்துக்கான தனி வட்டாட்சியராகப் பணிபுரிந்த செந்தில்குமார், களஆய்வின்போது வசூலித்த கட்டணத்தை அரசு கணக்கில் செலுத்தவில்லை. கடந்த ஓராண்டாக வசூலித்த ரூ.20,23,680ஐ தனது வங்கிக் கணக்கில் செலுத்தி கையாடல் செய்துள்ளார். அதே நேரம், அரசுக்கு கட்டணத்தைச் செலுத்தியதாக போலி ஆவணம் தயார் செய்துள்ளார். அந்த ஆவணத்தில் துணை ஆட்சியர் கையெழுத்தும் போலியாக போடப்பட்டுள்ளது.
துணை ஆட்சியர் பாஸ்யம் தணிக்கை செய்து, விசாரணை நடத்தியபோது இந்த விவகாரம் குறித்து தெரியவந்தது. இதுகுறித்து தேனி ஆட்சியருக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தனி வட்டாட்சியர் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து தேனி ஆட்சியர் க.வீ.முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் எச்சரிக்கை
இதுகுறித்து மதுரையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறும்போது, "கடந்த காலங்களில் பத்திரப்பதிவுத் துறையில் நடந்துள்ள அனைத்து தவறுகளையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க இடம் தரமாட்டோம் என்று தெரிவித்தார்.