

கோவை மசக்காளிபாளையம் நீலிகோனார் வீதியில் பத்மநாபன்-செல்வராணி தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஹேமவர்ஷினி (15), ஸ்ரீஜா (8) என்ற இரு மகள்கள் இருந்தனர். பத்மநாபன் மது பழக்கத்துக்கு அடிமையானவர். செல்வராணியும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்.
இந்நிலையில், 2018 டிச. 6-ம் தேதி மாலை, செல்வராணியிடம் மது குடிக்க பணம் கேட்டு பத்மநாபன் அடித்துள்ளார். தகவலறிந்து வந்த போலீஸார், "மறுநாள் காலை காவல் நிலையம் வர வேண்டும். அதுவரை பிரச்சினை செய்யக்கூடாது" என கூறினர். அதற்கு பத்மநாபன், "எனது 2 குழந்தைகள் மட்டும் வீட்டில் இருக்கட்டும். மனைவியும், என் அம்மாவும் வீட்டின் வெளியே இருக்கட்டும். உள்ளே வரக்கூடாது" என தெரிவித்துள்ளார். பின்னர், 2 குழந்தைகளை வீட்டுக்குள் அழைத்துச் சென்று தூங்க வைத்துள்ளார்.
போலீஸார் தன்னை விசாரித்த விஷயம் அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்ததால் மன உளைச்சலில் இருந்த பத்மநாபன், டிச.7 அதிகாலை 1 மணியளவில் படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் ஹேமவர்ஷினி, ஸ்ரீஜா ஆகியோரின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தார்.
காலை 5 மணியளவில் பத்மநாபனின் மனைவியும், தாயும் கதவைத் திறந்து பார்த்தபோது, அவர்களையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினிதேவி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். அதில், 2 குழந்தைகளை கொலை செய்த குற்றத்துக்காக இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சரோஜினி ஆஜரானார்.