100% பயணிகளுக்கு அனுமதி அளித்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும்: தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தகவல்

100% பயணிகளுக்கு அனுமதி அளித்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும்: தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தகவல்
Updated on
1 min read

100 சதவீதம் பயணிகளுடன் பேருந்து இயக்க அனுமதி அளித்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும், என ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் 50 சதவீதம் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை 500-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. எனினும், தனியார் பேருந்துகள் இன்னும் இயக்கப் படவில்லை. இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா தாக்கம் காரணமாக பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 50 சதவீதம் பயணிகளுடன் மட்டுமே பேருந்து இயக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு உச்சத்தை அடைந்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் 50 சதவீதம் பயணிகளுடன் பேருந்தை இயக்குவது என்பது சாத்தியமில்லை. எனவே, இப்போதைக்கு தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்து முடிவு செய்யவில்லை. இப்போது இயக்கினால் எங்களுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். ஒரு சில மாவட்டங்களில் பெயரளவிற்கு தனியார் பேருந்துகள் இயங்கி வருகிறது. 100 சதவீதம் பயணிகளுடன் பேருந்து இயக்க அனுமதி அளித்தால் மட்டுமே தனியார் பேருந்துகளை இயக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in