

பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர், சூரியஒளியில் இயங்கக் கூடிய காரை வடிவமைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டில் 15 வயது சிறுவன், க்ருத்திக், கடந்த இரண்டு வாரங்களாக சூரியஒளியில் இயங்கக் கூடிய காரை உருவாக்கி சோதனை ஓட்டத்தை நடத்தி வருவது அங்கு வசிப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரோபோடிக்ஸ் துறையில் தேசிய அளவில் 10 விருதுகளையும், மாநில அளவில் 8 விருதுகளையும் பெற்றுள்ளார். சொந்தமாக ரோபோடிக்ஸ் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருவதோடு, பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சியையும் அளித்து வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்து க்ருத்திக்கைத் தொடர்பு கொண்டபோது, தான் உருவாக்கி உள்ள சூரியஒளியில் இயங்கக் கூடிய கார் பற்றி விவரித்தார். அவர் கூறியதாவது: நான் தற்போது11-ம் வகுப்பு படித்து வருகிறேன். 3-ம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு மின்சாரம், கணினி மற்றும் ரோபோடிக் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டேன்.
ரூ.500-க்கு வீட்டிலேயே ஏர்கூலர் தயாரிப்பு, குறைந்த விலையில் காதுகேட்கும் இயந்திரம், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் கருவி உள்ளிட்ட பல்வேறுஉபகரணங்களை வடிவமைத்துள்ளேன். 8-ம் வகுப்பு படிக்கும் போது ஃப்யூச்சுரா ரோபோடிக்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் குறித்து பயிற்சி அளித்து வரு கிறேன்.
இந்நிலையில், நான் புதிதாக சூரியஒளி மற்றும் மின்சார பேட்டரியில் இயங்கக் கூடிய காரை உருவாக்கி உள்ளேன். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எரிபொருள் விலையால், இனி எதிர்காலத்தில் அடுத்த தலைமுறையினருக்கான கார்கள் சூரியஒளியில் இயங்கக் கூடியதாக இருக்கும். அவ்வாறு இயங்கக் கூடிய கார்களை குறைந்த விலையில் தயாரிக்க வேண்டும் என்பதற்காக இந்தக் காரை உருவாக்கி உள்ளேன். தற்போது, இந்தக் காரின் அடிப்படைக் கட்டுமானத்தை மட்டுமே உருவாக்கி உள்ளேன். இதற்கு ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம் வரை செலவாகி உள்ளது. இதை முழுமையான கார் வடிவமாக உருவாக்க ரூ.70 ஆயிரம் வரை செலவாகும்.
பேட்டரி மற்றும் சூரியஒளி பேனல்கள் மூலம் இயங்குவதால், இந்தக் கார் பாதி வழியில் நிற்கும் என அஞ்சத் தேவையில்லை. இந்தக் காரை வடிவமைக்க எனக்கு 2 முதல் 3 வாரங்கள் வரை ஆனது. இந்தக் காருக்கு ‘போட்டோ வோல்டெக்’ என பெயர் சூட்டியுள்ளேன். இந்தக் காருக்கு காப்புரிமை பெறவும் திட்டமிட்டுள்ளேன் என்றார்.