

பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் கடந்த 2011 முதல் 2021-ம் ஆண்டு வரை உள்ள பெட்ரோல், டீசல் விலைப்பட்டியலை ஏணி வடிவில் பதாகைகள் மூலம் வடிவமைத்தும், சமையல் காஸ் விலை உயர்வைக் குறிப்பிடும் வகையில் செங்கல்லில் அடுப்பு போல் வடிவமைத்து விறகு வைத்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமைதாங்கிய கட்சியின் துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா, செய்தி\யாளர்களிடம் கூறும்போது, ‘‘பெட்ரோல், டீசல், விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலைவிண்ணைத் தொடும் நிலைக்குச் சென்று விட்டன. மக்களுக்கான எந்த திட்டத்தையும் மத்திய அரசு செய்யவில்லை. எரிபொருள் மற்றும் காஸ் மீதான விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மத்திய அரசு விலையைக் கட்டுப்படுத்தும் வரை எங்களின் போராட்டம் தொடரும்’’ என்றார்.
மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியவர்கள் திமுகவில் இணைந்தது பற்றிகூறும்போது, ‘‘முகம் தெரியாமல் இருந்தவர்கள் முகவரி கிடைத்தவுடன் வியாபார நோக்கில் வேறு கட்சிக்குச் சென்றுவிட்டனர். இதைத்தான் கமல்ஹாசன் துரோகம் என்று குறிப்பிட்டார்’’ என்றார்.