ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சென்னையில் ரஜினிகாந்த் நாளை சந்திக்கிறார்
ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை ரஜினிகாந்த் நாளை சந்தித்து பேசுகிறார்.
தமிழகத்தில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வகையில் கட்சி தொடங்கஇருப்பதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். முன்னதாக ரஜினி மக்கள் மன்றமும் தொடங்கப்பட்டது. இந்தமக்கள் மன்றத்துக்கு மாவட்டசெயலாளர்களும் நியமிக்கப்பட்டனர். அவ்வப்போது மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வந்தார்.
2021 தேர்தல் நெருங்கும் வேளையில், கரோனா தொற்று வேகமாக பரவிய நிலையில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட தன்னால் கட்சிப்பணியாற்ற முடியாது என்று ரஜினிகாந்த் கருதினார். அதனால் அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதில்லை என கடந்த டிசம்பரில் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.
2021 தேர்தல் முடிந்த பிறகு, ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றார். சிகிச்சை முடிந்து கடந்த வாரம் சென்னை திரும்பினார்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகிகளை ரஜினிகாந்த் நாளை (ஜூலை 12) காலை 9 மணிக்கு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்க உள்ளார். விரைவில் தேர்தல்கள் ஏதும் இல்லாத நிலையில், எதைக்குறித்து நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் விவாதிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
