அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் குறித்த புகார்களை தெரிவிக்க ரேஷன் கடைகளில் பதிவேடு: தமிழக அரசு நடவடிக்கை

அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் குறித்த புகார்களை தெரிவிக்க ரேஷன் கடைகளில் பதிவேடு: தமிழக அரசு நடவடிக்கை
Updated on
1 min read

அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் குறித்த புகார்களைத் தெரிவிக்கும் வகையில், ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. தற்போது பொதுவிநியோகத் திட்டம் கணினி மயமாக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்பட்டு, அதன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

பொருட்கள் வாங்கும்போது ரேஷன் கார்டுதாரரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும்.அதிலேயே புகார் தெரிவிப்பதற்கான எண்ணும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவுத் துறை செயலர் முகமது நசிமுதீன், உணவுப் பொருள் வழங்கல் ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த ஜூலை 8-ம் தேதி திருவள்ளூரில் உணவுத் துறை அமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ-க்கள், ரேஷன் கடைகள் தொடர்பான புகார்களை இணையவழியில் தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் உள்ளதால், கடைகளில் நேரடியாக எழுத்து மூலம் புகார் தெரிவிக்கும் வகையில், ஒவ்வொரு கடையிலும் புகார் பதிவேடு வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

எனவே, புகாரை உடனடியாக தெரிவிக்கவும், அதன் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் முடியும் என்றும் தெரிவித்தனர்.

இதை ஆய்வு செய்து, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இணையவழி புகார் தெரிவிக்கும் நடைமுறையுடன், ஒவ்வொரு ரேஷன் கடையிலும் புகார் பதிவேடு பராமரிக்க வேண்டும் என்றுமுடிவெடுக்கப்பட்டது. இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு அமைக்கஉணவுப் பொருள் வழங்கல் ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in