

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்று தேசிய துப்புரவுப் பணியாளர் ஆணையத் தலைவர் மா.வெங்கடேசன் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில், மாநகராட்சியில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில், 11 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பையை அகற்றும் பணி தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதனால், தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ் பணியில் அமர்த்தப்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கடந்த ஜனவரி மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து பணி இழந்தவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத் தலைவர் மா.வெங்கடேசன் சென்னை வந்திருப்பதை அறிந்து, பணி இழந்த தூய்மைப் பணியாளர்கள் சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் நேற்று அவரைச் சந்தித்து, தங்களுக்கு மாநகராட்சியில் மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியை நேரில் வரவழைத்து, துப்புரவுப் பணியாளர் ஆணையத் தலைவர் மா.வெங்கடேசன் விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு கரோனா பரவல் காலத்தில்இந்த ஒப்பந்தப் பணியாளர்கள்கடுமையாகப் பணியாற்றியுள்ளனர். அவற்றை எல்லாம் மறந்து, மாநகராட்சி நிர்வாகம் இவர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
இவர்கள் கடந்த ஜனவரியில் போராட்டம் செய்தபோது, அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், மாநகராட்சியில் கடிதம் அளித்திருந்தார். அதை மாநகராட்சி நிர்வாகம் இன்னும் செயல்படுத்தவில்லை. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரிடம் விசாரணை நடத்தினேன்.
பணி நீக்கம் செய்யப்பட்ட பலருக்கு, தூய்மைப் பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திலேயே பணி வழங்கப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ளவர்களை மாநகராட்சியில் வேறு துறைகளில் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர் முறையை ஒழிக்க வேண்டும். நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டதுபோல, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உள்ள பாதிப்புகளை ஆராயவும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகையை, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.