

சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே கீழடி அகழாய்வில் 3 அடுக்கு உறை கிணறு கண்டறியப்பட்டது. இந்நிலையில், அதை தொட்டி என சமூக வலைதளங்களில் அமைச்சர் தங்கம் தென்னரசு குழப்பியதால் தொல்லியல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.13-ம் தேதி முதல் 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன.
கீழடியில் இதுவரை 7 குழிகள் தோண்டப்பட்டு, மண் பானை, குவளை, காதில் அணியும் தங்க வளையம், பகடை, உழவுக் கருவி, கருப்பு, சிவப்பு நிறப் பானை ஓடுகள், மண் குவளைகள், சுடுமண், கண்ணாடி பாசிகள் கண்டறிப்பட்டன. மேலும் கொந்தகையில் 7-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வில் முதல்முறையாக மூன்றடுக்கு கொண்ட உறை கிணறு கண்டறியப்பட்டது. மேலும் கீழே சில அடுக்குகள் இருக்கலாம் என்பதால், தொல்லியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து தோண்டி வருகின்றனர்.
ஏற்கெனவே, 6-ம் கட்ட அகழாய்வில் 10-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் கண்டறியப் பட்டன.
ஆனால் அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘உறை கிணற்றை சுடுமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொட்டி' என தனது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார்.
குழப்பிய அமைச்சரால் தொல்லியல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.