

தமிழகம் முழுவதும் 2-வது தவணையாக 66 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகளுக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இந்தியாவில் போலியோ நோயை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த மாதம் 17-ம் தேதி நடந்தது. தமிழகத்தில் மொத்தம் 70 லட்சத்து 65 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 67 லட்சத்து 17 ஆயிரம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2-வது தவணை சொட்டு மருந்து முகாம், தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற் றது. புதுக்கோட்டை நகராட்சி மருத்துவமனையில் நடந்த முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை யில் அமைக்கப்பட்ட முகாமை சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.
மகாமக திருவிழா நடக்கும் கும்பகோணத்தில் பல இடங் களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப் பட்டிருந்தன. இதுதவிர, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பஸ், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருந்த முகாம்கள் மூலம் 66 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகளுக்கு 2-வது தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சென்னை யில் 6 லட்சத்து 82 ஆயிரம் குழந் தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற முகாம்களில் 6 லட்சத்து 47 ஆயிரம் குழந் தைகளுக்கு (95 சதவீதம்) சொட்டு மருந்து வழங்கப்பட்டது.