

காரைக்குடி பகுதி பள்ளி சத்துணவு மையங்களில் ஜூன் மாத முட்டைகள், ஜூலையில் விநியோகித்த நிலையில், 100-க்கு 10 முட்டைகள் அழுகி போனதால் ஊழியர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
கரோனா ஊரடங்கால் சத்துணவு சாப்பிட்ட குழந்தை களுக்கு உலர் உணவுப் பொருட்களுடன் மாதத்துக்கு 10 முட்டைகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அவற்றை பள்ளிகளுக்கு மாணவர்கள் அல்லது பெற்றோரை வரவழைத்து சத்துணவு ஊழியர்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் காரைக்குடி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஜூன் மாதத்துக்குரிய முட்டைகளை ஒப்பந்ததாரர்கள் கடந்த மாதம் விநியோகிக்கவில்லை.
சில நாட்களுக்கு முன்புதான் ஜூன் மாதத்துக்குரிய முட்டைகள் பள்ளிகளுக்கு வந்தன. அந்த முட்டைகளை தற்போது மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். முட்டைகள் மிகச் சிறிதாக இருப்பதோடு, 100-க்கு 10 முட்டைகள் அழுகி உள்ளன. சில முட்டைகள் உடைந்தும் காணப்படுகின்றன.
இதனால் மாணவர்களுக்கு 10-க்கும் குறைவான முட்டைகளே வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து சத்துணவு ஊழியர்கள் சிலர் கூறுகையில், பள்ளிகள் திறந்திருந்தபோது வாரத்துக்கு இருமுறை முட்டைகள் பள்ளிகளுக்கு வரும். ஆனால், தற்போது மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது. முட்டைகளை தேக்கி வைத்து பள்ளிகளுக்கு அனுப்புவதால் அழுகி விடுகின்றன. மேலும் முட்டைகளின் அளவும் சிறிதாக உள்ளன என்றனர்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சாந்தி கூறுகையில், ‘முட்டைகள் உடைந்தாலோ, அழுகி இருந்தாலோ உடனடியாக மாற்றி கொடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு தெரிவித்துள்ளோம். தற்போது வந்துள்ள புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.