

சென்னை அரசு பொது மருத்துவமனையில், முழு உடல் பரிசோதனை திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. பரிசோதனைக்கு கட்டணமாக ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களுக்காக மிகக் குறைந்த கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை, மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டங்கள், சென்னை அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.10 கோடி செலவில் திட்டத்துக்கான கட்டிடம் புனரமைக்கப்பட்டு, பரிசோதனைக்கு தேவையான கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் ‘அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்’ விரைவில் செயல்படத் தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக அரசு பொது மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) ஆர்.விமலா கூறியதாவது:
விரைவில் தொடக்கம்
‘அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்’ விரைவில் தொடங்க உள்ளது. கட்டிடம் தயார் நிலையில் இருக்கிறது. செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனைக்கு ரூ.5 ஆயிரம் தொடங்கி ரூ.20 ஆயிரத்துக்குமேல் உள்ளது. இந்த மருத்துவமனையில் தொடங்கப்பட உள்ள அம்மா முழு உடல் பரிசோதனைக்கு ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000 ஆயிரம் என கட்டணம் நிர்ணயித்து இருக்கிறோம்.
இதில் ரூ.3,000 என்பது மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனையாகும். காலையில் பரிசோதனைக்கு வந்தால் மதியம் சென்றுவிடலாம். காலையில் உணவு வழங்கப்படும். மறுநாள் வந்து பரிசோதனை முடிவுகளை வாங்கிக் கொண்டு, சம்பந்தப்பட்ட டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெறலாம்.
அனைத்து பரிசோதனைகளும்
ரத்தம், சிறுநீரகம், கொழுப்பு, கல்லீரல், தைராய்டு, சர்க்கரை, எக்ஸ்ரே, எக்கோ, கருப்பை வாய், மார்பக புற்று, வைட்டமின்- டி உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படும். அம்மா முழு உடல் பரிசோதனை தொடங்கப்பட்ட பிறகு, தற்போது ரூ.250-க்கும் செய்யப்படும் முழு உடல் பரிசோதனை திட்டம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.