கரோனா, ஜிகா வைரஸ் பரவல் அதிகரிப்பால் கேரளாவில் இருந்து கோவைக்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: ஆட்சியர் உத்தரவு

கரோனா, ஜிகா வைரஸ் பரவல் அதிகரிப்பால் கேரளாவில் இருந்து கோவைக்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: ஆட்சியர் உத்தரவு
Updated on
2 min read

கேரளாவில் இருந்து கோவைக்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்ததைத் தொடர்ந்து, பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கோவையை ஒட்டியவாறு அமைந்துள்ள கேரளாவில் கரோனா தொற்று பரவல் குறையாமல் தொடர்ந்த நிலையில் உள்ளது. கேரளாவில் கரோனா தொற்று பரவல் 10.83 சதவீதம் என்ற அளவுக்கு உள்ளது.

அதேபோல், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒரு பெண் உட்பட 13 பேருக்கு ஜிகா வைரஸ் தாக்கம் சமீபத்தில் கண்டறியப்பட்டது. டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசு மூலமாக, ஜிகா வைரஸ் பரவுகிறது.

கரோனா பரவல் குறையாதது, ஜிகா வைரஸ் தாக்கம் பரவல் போன்றவை உள்ள காரணத்தால் கோவையை ஒட்டியுள்ள கேரள எல்லையில் கண்காணிப்புப் பணியை மாவட்ட நிர்வாகத்தினர், தீவிரப்படுத்துவதோடு, வந்து செல்பவர்களை கண்டறிய இ-பாஸ் முறையை கட்டாயம் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர், சமூக செயல்பாட்டாளர்கள் தரப்பில் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டன.

ஏனெனில், கேரளாவின் பாலக்காடு மற்றும் அதற்கருகேயுள்ள பகுதிகளில் இருந்து கல்வி, வேலை, தொழில் போன்ற பலவித தேவைகளுக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அதேபோல், கோவையில் இருந்தும் மேற்கண்ட காரணங்களுக்காக பலர் தினமும் கேரளாவுக்குச் சென்று வருகின்றனர்.

இ-பாஸ் கட்டாயம்

இதைத் தொடர்ந்து, தமிழக - கேரளா எல்லையான கோவை வாளையாறு சோதனைச்சாவடியில் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சிலர் கூறும்போது,‘‘ தமிழக அரசின் உத்தரவின் பேரில், மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளால் கோவையில் கரோனா பரவல் குறைந்துள்ளது.

அதேசமயம், கோவை எல்லையில் அமைந்துள்ள கேரளாவில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, கேரளாவில் இருந்து கோவைக்குள் வருபவர்களும், கோவையில் இருந்து கேரளா மாநிலத்துக்குச் சென்று திரும்புபவர்களும் https://eregister.tnega.org என்ற இணையதள முகவரியில் சென்று இ-பாஸ் கட்டாயம் பெற்று வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசின் உத்தரவின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் அமல்படுத்தியுள்ளார்.

கோவை - கேரளாவை ஒட்டியுள்ள வாளையாறு, வேலந்தாவளம், மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், ஆனைக்கட்டி, கோபாலபுரம், நடுப்புணி,வீரப்ப கவுண்டன் புதூர், கோபநாரி ஆகிய எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், உள்ளாட்சித்துறையினர் இணைந்து கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து கோவைக்குள் நுழைபவர்கள் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இ-பாஸ் இல்லையென்றால் அனுமதிக்கமாட்டார்கள். தனிநபர், இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வரும் ஓட்டுநர்கள் உட்பட அனைவருக்கும் இந்த நிபந்தனை பொருந்தும். கேரளாவில் இருந்து கோவைக்கு வந்த பின்னர், கரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், மாவட்ட கட்டுப்பாட்டு மையத்துக்கு ( எண் 1077) தகவல் தெரிவிக்க வேண்டும்,’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in