திருச்சியை 2-ம் தலைநகராக்குவதற்கான முயற்சிகள் தொடரும்: திருநாவுக்கரசர் எம்.பி.

திருச்சியை 2-ம் தலைநகராக்குவதற்கான முயற்சிகள் தொடரும்: திருநாவுக்கரசர் எம்.பி.
Updated on
2 min read

காலத்தின் தேவை, சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதால் திருச்சியை 2-ம் தலைநகராக்குவதற்கான முயற்சிகள் தொடரும் என எம்.பி., சு.திருநாவுக்கரசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உறுதி அளித்துள்ளனர்.

திருச்சி விமான நிலைய மேம்பாட்டு ஆலோசனைக் குழுக் கூட்டம் விமான நிலைய பழைய முனையத்தில் இன்று நடைபெற்றது. குழுத் தலைவரும், திருச்சி தொகுதி எம்.பி.யுமான சு.திருநாவுக்கரசர் தலைமை வகித்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:

''திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான சுமார் 700 ஏக்கர் நிலத்தைப் பெற ராணுவம் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விவசாய நிலம், வீடுகள் என்பதால் பொதுமக்களிடம் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் விருப்பத்துடன் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. எனவேதான், இதுவரை 46 ஏக்கர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோருடன் கூட்டம் நடத்தி, இப்பணிகள் விரைவுபடுத்தப்படும். மன்னார்புரம் பாலத்துக்குத் தேவையான ராணுவ நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான உத்தரவுக் கடிதம் ஓரிரு நாட்களில் கிடைத்துவிடும்.

திருச்சியை இரண்டாம் தலைநகரமாக்க வேண்டும் என எம்ஜிஆர் விரும்பினார். இத்தொகுதியில் நான் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து இதை வலியுறுத்தி வருகிறேன். இதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். சில மாவட்டங்களைப் பிரித்து சிலர் கொங்கு நாடு கேட்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு வாய்ப்பில்லை. என்றும் ஒரே நாடு தமிழ்நாடு. அதுவும் இந்தியாவுக்குள் இருக்கிறது.

அப்படிப் பார்த்தால், பாமக நிறுவனர் ராமதாஸ் சில மாவட்டங்களைப் பிரித்து தனி ஒரு மாநிலம் கேட்கிறார். அவரவர் விருப்பத்துக்குக் கேட்பதையெல்லாம் செய்ய முடியாது. தற்போதைய திமுக அரசு சில புதிய மாவட்டங்களை உருவாக்கப் போவதாகத் தகவல்கள் வெளியானதால், புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து பிரித்து அறந்தாங்கியை தனி மாவட்டமாக்க வேண்டும் என அங்குள்ள மக்களும், அத்தொகுதியின் எம்எல்ஏவுமான ராமச்சந்திரனும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படி அமைந்தால், அந்த ஊர்க்காரர் என்ற அடிப்படையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு நான் முயலவில்லை.

கட்சியின் தலைமை, அப்பதவியை எனக்குக் கொடுத்தால் திறம்படச் செயல்பட நான் தயாராக இருக்கிறேன். உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும்''.

இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''திருச்சியை 2-ம் தலைநகரமாக்க வேண்டும் என்று சட்டப்பேரவையின் கன்னிப்பேச்சில் கோரிக்கை விடுத்தேன். அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசீலனை செய்து வருவதாக மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. காலத்தின் தேவை, போதிய உள்கட்டமைப்பு, போக்குவரத்து, நீர் வசதி உள்ளிட்டவை இருப்பதால் திருச்சியை 2-ம் தலைநகராக்குவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம்'' என்றார்.

இக்கூட்டத்தில் விமான நிலைய இயக்குநர் எஸ்.தர்மராஜ், மாநகரக் காவல் துணை ஆணையர் சக்திவேல், குழு உறுப்பினர்கள் டாக்டர் அலீம், ரெக்ஸ், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in