கொங்கு நாடு சர்ச்சை; பாஜகவினரின் கருத்து ஆபத்தானது: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

கொங்கு நாடு சர்ச்சை; பாஜகவினரின் கருத்து ஆபத்தானது: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
Updated on
1 min read

கொங்கு மண்டலத்தைத் தனியாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்று பாஜகவினர் கருத்து கூறுவது ஆபத்தானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக, புதுக்கோட்டையில் இன்று (ஜூலை 10) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

”ஏற்கெனவே மாநில உரிமைகளில் பலவற்றை மத்திய அரசு பறித்துள்ள நிலையில், கூட்டுறவுத் துறை போன்ற துறைகளையும் கைப்பற்றும் நோக்கில் மத்திய அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. மேகேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.

இந்த அணையை அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களே எதிர்க்கின்றனர். எனினும், வரும் தேர்தலில் மக்களிடம் வாக்குகள் பெறவேண்டும் என்பதற்காக கர்நாடக அரசு பிடிவாதம் காட்டுகிறது.

தமிழகத்தில் கொங்கு மண்டலத்தைத் தனியாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்று பாஜகவினர் கருத்து கூறுவது ஆபத்தானது. மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் கொல்லைப்புறமாக பாஜக நுழைய நினைத்தால் அதற்கான எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த விவகாரத்தை அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றுசேர்ந்து முறியடிக்க வேண்டும்.

கரோனா தடுப்பு நடவடிக்கையில் திமுக அரசின் செயல் பாராட்டுக்குரியது. 3-வது அலை வந்தாலும் அதையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கரோனா முழுமையாகக் கட்டுக்குள் வராதவரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாகத் தளர்த்தக் கூடாது.

காவிரி-குண்டாறு திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மீது எழும் புகார்களை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடுகள் ஏதுமின்றி நெல் கொள்முதல் செய்வதற்குத் தேவையான வசதிகளைத் தமிழக அரசு செய்துகொடுக்க வேண்டும்.

திமுக அரசு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அதே சமயம், ஆட்சிக்கு வந்த 2 மாதங்களிலேயே எல்லாவற்றையும் எதிர்பார்க்க முடியாது”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

பேட்டியின்போது, கந்தர்வகோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரை, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in