எந்த கியரை போட்டு எந்த பக்கம் போவார்களோ? - இல.கணேசன்

எந்த கியரை போட்டு எந்த பக்கம் போவார்களோ? - இல.கணேசன்
Updated on
1 min read

தமிழகத்தில் பாஜகவின் முகமாக அறியப்படும் இல.கணே சன், நகைச்சுவை உணர்வு கொண்டவர். சென்னை கமலாலயத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அவர். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு கேலியும் கிண்டலுமாக அவர் அளித்த பதில்கள்:

தேமுதிகவும், பாமகவும் பாஜக கூட்டணியில் இருப்பதாக சொல்கிறீர்கள். ஆனால், அவர்கள் கூட்டணியில் இல்லை என மறுக்கிறார்களே?

அவர்கள் சொல்வதும் சரி தான். இப்போதெல்லாம் கூட்டணி என்பதே தேர்தல் முடியும் வரைதான். தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நிமிடமே அனைத்துக் கட்சிகளும் நியூட்ரலுக்கு வந்து விடுகின்றன. 2014-ல் பாஜக அணியில் இருந்த கட்சிகள் அனைத்தும் இப்போது நியூட்ரலில் உள்ளன. யார் எந்த கியரைப் போட்டு எந்தப் பக்கம் போவார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

மத்தியில் தனித்து ஆட்சியில் இருக்கும் பாஜகவால், தமிழகத்தில் ஏன் இதுவரை கூட்டணி அமைக்க முடியவில்லை?

எங்களுக்கு மட்டுமா இந்த நிலை? இப்போது இசை நாற்காலி போட்டி நடந்து கொண்டிருக்கிறது. எல்லா கட்சிகளும் அதில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இசை நிறுத்தப்பட்டால் தான் யார் எந்த நாற்காலியில் இருக்கிறார்கள் என்பது தெரியும். அதுவரை எல்லோரும் சுற்ற வேண்டியதுதான்.

ரயில்வே பட்ஜெட்டை தேமுதிக, பாமககூட எதிர்த்துள்ளதே?

எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்யும் பட்ஜெட்டை எதிர்க்க வேண்டும் என்பது அரசியலில் எழுதப்படாத விதி. பட்ஜெட்டுக்கு முதல்நாளே ‘இது மக்கள் விரோத பட்ஜெட்’, ‘தமிழகத்தை வஞ்சிக்கும் பட்ஜெட்’, ‘ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்’ என்பது போன்ற வாசகங்களுடன் அறிக்கையை தயார் செய்து விடுகின்றனர். இதைத்தான் நாங்களும் செய்தோம். இதையெல்லாமா சீரியஸாக எடுத்துக் கொண்டு கேள்வி கேட்பது?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in