சென்னையில் சிக்கிய போதை மருந்து கும்பல்: ரூ.1 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னையில் சிக்கிய போதை மருந்து கும்பல்: ரூ.1 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
Updated on
2 min read

வேளச்சேரியில் போதையில் இருந்த நபரைச் சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியதில் மிகப்பெரிய போதை மாத்திரை விற்கும் கும்பல் சிக்கியது. ரூ.1 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளைக் கைப்பற்றிய போலீஸார் 4 பேரைக் கைது செய்தனர்.

சென்னையில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலின் பேரில், காவல் ஆணையர் உத்தரவின் பேரில், இதற்கென சென்னையில் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் கண்காணித்து வருகின்றனர். அடையாறு துணை ஆணையர் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் இதேபோன்று அமைக்கப்பட்ட தனிப்படை ஒன்று வேளச்சேரி பேபி நகரில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது போதையில் தள்ளாடியபடி வந்த ஒரு நபரைப் பிடித்து விசாரித்தனர்.

அவர் மது அருந்தவில்லை, கஞ்சா புகைத்ததற்கான அறிகுறியும் இல்லை, ஆனால், முழு போதையில் இருந்தார். அவரை சோதித்தபோது ஒரு கிராமுக்கும் குறைவாகப் படிக வடிவில் வெள்ளை நிறத்தில் போதைப் பொருளை கவரில் போட்டு வைத்திருந்தது தெரியவந்தது. அதுகுறித்து விசாரித்தபோது அது மெத்தா பேட்டமைன் (Methaphetamine) என்கிற போதைப்பொருள் எனத் தெரியவந்தது.

அவரைப் பிடித்து விசாரித்த வேளச்சேரி போலீஸார், எங்கே வாங்கியது என விசாரித்தனர். ''இதற்காகத் தனியாக ஆட்கள் இருக்கிறார்கள்., அவர்களிடம் 5,000 ரூபாய் அல்லது 10,000 ரூபாய் கொடுத்து வாங்குவேன்'' என்று பதிலளித்தார். யாரிடம் வாங்குவாய் என்று கேட்டபோது, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அஜ்மல்கான் (22) என்பவரிடம் வாங்கியதாகத் தெரிவித்தார்.

''மெத்தா பேட்டமைன் என்கிற போதைப்பொருள் விலை உயர்ந்த போதைப்பொருள் ஆகும். ஒரு கிராம் ரூ.10,000 வரை விற்கப்படுகிறது. வழக்கமான போதைப் பொருட்களை விட அதிக அளவில் போதை தரக்கூடியது. அதிக நேரம் போதையில் வைத்திருக்கக்கூடியது. இந்த போதைப்பொருள் படிக வடிவில் கிடைக்கக்கூடியது. அதைத் தூளாக்கி போதை பவுடரை அரை கிராம் எடைக்கும் குறைவாக நீரில் கலந்து 10 முறை பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்தும் பட்சத்தில் 4 முதல் 6 மணி நேரம் வரை சுய நினைவு இழந்து போதையில் இருப்போம். அதனால் மற்ற போதை வஸ்துக்களை விட இதை அதிகம் பயன்படுத்துகிறோம். இதில் போதையில் இருக்கும்போது மற்றவர்களால் கண்டுபிடிக்கவும் முடியாது. இதை ஊசிகள் மூலமும் சிலர் உடலில் செலுத்திக் கொள்கின்றனர்'' என்று பிடிபட்ட நபர் தெரிவித்தார்.

இதையடுத்து அவரை வைத்து சம்பந்தப்பட்ட நபரான அஜ்மல்கானை போலீஸார் பிடித்தனர். பின்னர் அஜ்மல்கானிடம் விசாரணை நடத்தியபோது ராயபுரத்தைச் சேர்ந்த பஷீர் அகமது (48) என்பவர் வெளிநாட்டிலிருந்து மெத்த பேட்டமைன் போதைப்பொருளை வரவழைத்து என் போன்ற ஆட்களுக்கு சப்ளை செய்வார் என்று தெரிவித்தார்.

பின்னர் அவரை போலீஸார் தேடிக் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அவரது கூட்டாளிகளான சேப்பாக்கத்தைச் சேர்ந்த சேட்டு முகமது (47), பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் காலிக் (47) ஆகியோரைக் கைது செய்தனர். பிடிபட்டவர்களிடமிருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான படிக வடிவிலான 1 கிலோ 348 கிராம் எடையுள்ள மெதா பேட்டமைன் போதைப்பொருளைக் கைப்பற்றினர்.

மேலும், அவர்களிடமிருந்து 1,22,000 ரூபாய் ரொக்கப் பணம், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 2 இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்களைக் கைப்பற்றினர். இதில் முக்கியக் குற்றவாளியான பஷீர் அகமது என்பவர் ஏற்கெனவே 2010ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக எலக்ட்ரானிக் பொருட்களைக் கடத்தி வந்த குற்றத்திற்காக சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நால்வருடன் வேறு யாரும் சென்னையில் தொடர்பில் உள்ளனரா? இதேபோன்று வேறு போதைப்பொருள் கும்பல் சென்னையில் செயல்படுகிறதா? வெளிநாட்டிலிருந்து எப்படி சென்னைக்கு போதைப்பொருட்கள் வருகின்றன என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெத்தா பேட்டமைனுக்கு அறிவியல் ஃபார்முலா C10H15N ஆகும். இது என்.மெதிலாம் பேட்டமைன் (N-methylamphetamine), என். டைமெதில் பெனதைலாமின் (N,α-dimethylphenethylamine), டிசாக்சி பெட்ரின் (desoxyephedrine) என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. கடுமையான போதை தரக்கூடியது. இதை மாத்திரை வடிவிலும் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் மூளை நரம்புகள் பாதிப்பு, மனநலன் பாதிப்பு, மூச்சிரைப்பு, உயர் ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் போன்றவை வர வாய்ப்புள்ளது. இத்தகைய போதைப் பொருட்களை அதிக விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் இளைஞர்கள் போதையின் காரணமாக குற்ற உணர்ச்சி எதுவுமின்றி குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், போதைப் பொருள் வாங்கப் பணமில்லாதபோது அதை வாங்குவதற்காக எந்தக் குற்றச்செயலிலும் ஈடுபடத் தயக்கம் காட்டமாட்டார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

மது போதையைவிட மோசமான இந்த போதைக்கு இளைஞர்கள் அடிமையாகி வருவது சென்னையில் அதிகரித்து வருவதால் போலீஸார் இதுகுறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in