சென்னையில் ரூ.2,500 கோடியில் பூங்காவா?- அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

50 ஆயிரம் மரங்களுடன்கூடிய குறுங்காட்டைத் திறந்துவைத்த அமைச்சர் கே.என்.நேரு.
50 ஆயிரம் மரங்களுடன்கூடிய குறுங்காட்டைத் திறந்துவைத்த அமைச்சர் கே.என்.நேரு.
Updated on
1 min read

சென்னையில் ரூ.2,500 கோடியில் பூங்கா மட்டும் அமைக்கப்போவதாகக் கூறுவது தவறு எனவும், அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பூனாம்பாளையத்தில் 50 ஆயிரம் மரங்களுடன் கூடிய குறுங்காடு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையிலான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஜூலை 10) திறந்து வைத்தார்.

அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"திருச்சி மாவட்டத்திலுள்ள அரசு நிலங்களில் 10 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் மீதமுள்ள 4 லட்சம் மரக்கன்றுகளும் நடப்படும்.

தமிழகத்தில் மேலும் 6 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாநகராட்சிகள், நகராட்சிகளை விரிவுபடுத்தவும், புதிய நகராட்சிகளை உருவாக்கவும், ரூ.10 கோடிக்கு வருவாய் உள்ள பேரூராட்சிகளை நகராட்சியாகத் தரம் உயர்த்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவை குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேச உள்ளோம். அதன்பின், முதல்வர் இதுகுறித்து முறைப்படி அறிவிப்பு வெளியிடுவார்.

சென்னையில் ரூ.2,500 கோடியில் பூங்கா அமைக்கப் போவதாக நான் அறிவித்துள்ளதாகவும், அது தேவையா எனவும் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் கேட்டுள்ளதாக, வாட்ஸ் அப்பில் தகவல் வருகிறது. ரூ.2,500 கோடிக்குப் பூங்காக்கள் மட்டும் அமைக்கப்படவில்லை. அது தவறான தகவல்.

அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய்களைத் தூய்மைப்படுத்துவதுடன், அவற்றிலுள்ள நீரை மறுசுழற்சிக்கு உட்படுத்தி, தொழிற்சாலைகள் உள்ளிட்ட இதர தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையிலும், ஆறுகளில் கொசு உற்பத்தியைக் குறைப்பதற்காகவும், கரையோரங்களில் பூங்கா அமைத்து மக்கள் பயன்படுத்தும் வகையிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டம் தற்போது ஆரம்ப நிலையில்தான் உள்ளது. திட்டத்துக்கான நிதிகூட இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து, திட்ட அறிக்கை தயார் செய்து, முதல்வரின் ஒப்புதல் பெற்றுச் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் விரிவாகத் தெரிவிக்கப்படும்".

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எம்எல்ஏக்கள் சி.கதிரவன் (மண்ணச்சநல்லூர்), ந.தியாகராஜன் (முசிறி), ஸ்டாலின்குமார் (துறையூர்), லால்குடி கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in