

அரக்கோணம் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளத்தைச் சுற்றியுள்ள 3 கி.மீ. தொலைவுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தின் மீது இரண்டு ட்ரோன்கள் உதவியுடன் கடந்த மாதம் இறுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள முப்படைகளின் தளங்கள் எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளம் இயங்கி வருகிறது. இங்கிருந்து வங்கக் கடல் பரப்பு கண்காணிப்புப் பணியுடன் ஹெலிகாப்டர் பைலட்டுகளுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்த மையத்தைச் சுற்றி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அரக்கோணம் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஐ.என்.எஸ் கடற்படை விமானத் தளம் மற்றும் சுற்றியுள்ள 3 கி.மீ. தொலைவுப் பகுதிக்குள் முன் அனுமதி இல்லாமல் ட்ரோன்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. முன் அனுமதி இல்லாமல் எச்சரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எல்லைக்குள் ட்ரோன்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் பறந்தால் அழிக்கப்படும் அல்லது பறிமுதல் செய்யப்படும். மேலும், அதன் உரிமையாளர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
ட்ரோன்களைப் பயன்படுத்தும் அரசு அல்லது தனியார் அமைப்புகள் எச்சரிக்கப்பட்ட பகுதியில் பறப்பதற்கு அனுமதி பெற விரும்பினால், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக இயக்குநரின் முன் அனுமதி பெற்று கிழக்கு பிராந்தியக் கடற்படைத் தலைமையகப் பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளத்தில் ஒரு வாரத்துக்கு முன்பாகச் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.